ராஜஸ்தானின் தார் பாலைவனம் உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரதேசம். மணல் மேடுகள், ஒட்டக சவாரி, ராஜஸ்தானி இசை, வண்ணமயமான உடைகள், மணலில் ஜீப் சவாரி - இவை அனைத்தும் அந்த
நிலத்தின் வெளிப்புற அழகை உலகிற்கு காட்டுகின்றன. ஆனால் அந்த அழகின் பின்னால், வெளிச்சத்திற்கு வராத இன்னொரு வாழ்க்கையும் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கை.
பல கிராமங்களில் பெண்களின் நாள் அதிகாலை தொடங்கி இரவு வரை ஓய்வின்றி நகர்கிறது. பல மணி நேரதண்ணீர் எடுத்து வருதல், கால்நடைகளை கவனித்தல், சமையல், குழந்தைகளை பார்த்துக்கொள்ளுதல் என குடும்பத்தின் ஆணிவேரான அனைத்தும் அவர்களின் பொறுப்புதான், ஆனால் குடும்ப முக்கிய முடிவுகளில் அவர்களின் குரல் பெரிதாக கேட்கப்படுவதில்லை. கல்வி பாதியிலேயே நிற்கும். சிறிய வயதிலேயே திருமணம் நடக்கும். “பெண்கள் வீட்டைத் தாண்டி செல்லக்கூடாது” என்ற மனநிலை இன்னும் பல இடங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்த சமூகத்தின் மையத்திற்குள் சென்று மாற்றத்தின் விதையை விதைத்திருக்கிறார் கிரிதிக்யா சம்பாவத்.
கிரிதிக்யா நகர வாழ்க்கையில் வளர்ந்தவர். பெங்களூரில் கல்வி கற்று, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்தவர். நகரப்பெண்கள் எப்படி தன்னம்பிக்கையுடன் வேலை செய்து, தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குகிறார்கள் என்பதை அவர் நேரில் பார்த்து வளர்ந்திருந்தார். வாழ்க்கை அவருக்கு பாதுகாப்பான தொழிலும், நவீன சூழலும் கொடுத்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் வேறு பாதைக்கு திரும்பியது. அவரது கணவர் ராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியைச் சேர்ந்த ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்ப வழக்கப்படி பெண்கள் வேலைக்குச் செல்வது கூடாது. திருமணத்திற்குப் பிறகு கிரிதிக்யா தார் பாலைவனக் கிராமங்களின் புரையோடிய வெப்பத் தெருக்களில் கிடக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் கிரதிக்யா சிந்தனை வேறு பாதையில் சுழன்றது.
சுற்றுலாப் புகைப்படங்களில் வண்ணமயமாகத் தோன்றும் பெண்களின் வாழ்க்கை உண்மையில் எவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள் இருந்தது என்பதை அவர் புரிந்து கொண்டார். பல பெண்களுக்கு பள்ளிக் கல்வியே முழுமையாக கிடைக்கவில்லை. சில பெண்கள்தங்கள் கிராமத்தைத் தாண்டி வெளியுலகை பார்த்ததே இல்லை. வீட்டிற்குள் இருந்தபடியே ரொட்டி சுட்டே வாழ்க்கை முழுவதையும் கழித்த பெண்கள் ஏராளம். சிலர் கைவினைப் பொருட்கள் செய்வதில் திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை.
பல பெண்களுக்கு தையல் தெரியும். கைஎம்பிராய்டரி தெரியும். பாரம்பரிய கைவினை தெரியும். ஆனால் அவை “வேலை” அல்லது “வருமானம்” ஆக மாறவில்லை. பெண்கள் வீட்டுக்காக உழைத்தார்கள்; ஆனால் அந்த உழைப்பிற்கு பொருளாதார மதிப்பு கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில்தான் கிரிதிக்யா உடன் நின்றார். ‘‘ இவர்கள் இருக்கும் இடத்திலேயே வாய்ப்புகள் அமைந்தால் எப்படி இருக்கும்?’’ என்கிற கிரதிக்யாவின் அந்த கேள்விக்கான பதிலாக உருவானதுதான் “தார் கி உடான்” என்ற முயற்சி. “உடான்” என்றால் பறத்தல். பெயருக்கு ஏற்றவாறு, வீட்டின் சுவர்களுக்குள் இருந்த பெண்களுக்கு புதிய உலகத்தை காட்டும் முயற்சியாக அது வளர்ந்தது. வீட்டிலிருந்தே சம்பாதிக்க பயிற்சி வகுப்புகள், மற்றும் தொழில் தெடங்க ஆவன செய்து கொடுப்பதே கிரதிக்யாவின் நோக்கம். ஆனால் பெண்களை பயிற்சிக்காக அனுப்ப பல குடும்பங்கள் தயங்கின. “பெண்கள் வெளியே செல்வது தேவையா?”, “அவர்கள் வேலை செய்து என்ன பயன்?” என்ற கேள்விகள் எழுந்தன. சில இடங்களில் சமூக எதிர்ப்பும் இருந்தது. ஆனால் கிரிதிக்யா தன்னிடம் வந்த பெண்களின் குரல்களை ஒன்றிணைத்து குரல் கொடுத்தார்.
அவர் முதலில் பெண்களிடம் மட்டும் பேசவில்லை; குடும்பங்களிடமும் பேசினார். கணவர்கள், மாமியார்கள், கிராம மூத்தவர்கள் அனைவரிடமும் இந்த முயற்சியின் நோக்கத்தை விளக்கினார். “பெண்கள் சம்பாதித்தால் குடும்பமே முன்னேறும்” என்பதை மெதுவாக புரியவைத்தார்.
முக்கியமாக, பெண்கள் தூரம் செல்ல வேண்டாம் என்பதற்காக கிராமங்களுக்குள்ளேயே பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. இதுவே பல குடும்பங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
இந்த ‘‘தார் கி உடான்’’ மையங்களில் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டவை சந்தையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ராஜஸ்தானி பாரம்பரிய ஆடைகள் தையல் பயிற்சி, கைஎம்பிராய்டரி, அலங்காரப் பொருட்கள் தயாரித்தல், மெஹந்தி கலை, மெழுகுவர்த்தி தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த திறமைகளைச் சுற்றுலா சந்தையுடன் இணைத்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜெய்சல்மர் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். திருமண நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள், உள்ளூர் வணிகர்கள் மூலம் பெண்களின் தயாரிப்புகளுக்கு சந்தை உருவாக்கப்பட்டது.
இதனால் பெண்களின் வாழ்க்கை மெதுவாக மாறத் தொடங்கியது. முன்பு குடும்பத்திடம் பணம் கேட்க வேண்டியிருந்த பெண்கள், இன்று தாங்களே சம்பாதிக்கத் தொடங்கினர். சில பெண்கள் மாதம் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை சம்பாதிக்கிறார்கள். திருமண சீசன்களில் வருமானம் மேலும் அதிகரிக்கிறது.
ஒரு பெண் தனது குழந்தைக்கான பள்ளிக் கட்டணத்தை தன் வருமானத்தில் செலுத்தும் தருணம் - அது குடும்பத்தின் மனநிலை மாற்றம். ஒரு பெண் தன்பெயரில் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் தருணம் - அது சமூக மாற்றத்தின் ஆரம்பம்.
பல பெண்கள் தங்கள் மகள்களின் கல்வியைப் பற்றி புதிய கனவுகள் காண ஆரம்பித்திருக்கிறார்கள். “நாங்கள் படிக்க முடியவில்லை; எங்கள் மகள்கள் படிக்க வேண்டும்” என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.
கிரிதிக்யா சம்பவத்தின் முயற்சி பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில் மட்டும் நிற்கவில்லை. பெண்களின் உடல்நலம், மனநலம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டது. மாதவிடாய் சுகாதாரம், மெனோபாஸ், பெண்கள் ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் மருத்துவர்களை அழைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
முன்பு அமைதியாக இருந்த பெண்கள், இன்று தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பகிர ஆரம்பித்துள்ளனர். பயிற்சி மையங்கள் அவர்களுக்கு வேலை கற்றுக்கொடுக்கும் இடமாக மட்டும் இல்லாமல், ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கும் சமூகமாகவும் மாறியுள்ளது.
கிரிதிக்யா சம்பவத்… தனக்கு வசதியான குடும்பம் கிடைத்துவிட்டது, இனி நமக்கென்ன கவலை என இருந்திருந்தால் இவ்வளவு பெரிய மாற்றத்தை நிச்சயம் முன்னெடுத்திருக்க முடியாது. பரிதாபம் பாராமல் பயிற்சி கொடுத்ததன் விளைவு இன்று பல பெண்கள் மாதம் ரூ15,000ஆயிரம் வரையிலும் வருமானம் ஈட்டுகிறார்கள். வறண்டுபோன தார் பாலைவனத்தில் அண்ணாந்து வானம் பார்க்க கூட முடியாத வாழ்வியலில் கூட இப்பேர்ப்பட்ட மாற்றத்தை ஒரு பெண் செய்திருக்கிறார் எனில் ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய கட்டுப்பாடுகளையும், தடைகளையும் உடைக்கத் தொடங்கினால் ஏழ்மையே இல்லாமல் போகும்.
- ஷாலினி நியூட்டன்
