ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது பழமையான பழமொழி என்றாலும் எக்காலத்திற்கும் பொருந்தும் புதுமொழி. அப்படித்தான் அமன்தீப் என்கிற 27 வயது பெண் சாதித்திருக்கிறார்.
பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் உள்ள ஜோத்பூர் என்ற சிறிய கிராமம். அங்கே, 27 வயதான அமன்தீப் கவுரின் வாழ்க்கை ஒரு சாதாரண கிராமத்து குடும்பத்தின் வாழ்க்கையைப் போலத்தான் இருந்தது. குடும்பத்துக்கு சொந்தமாகப் பெரிய நிலமோ, வசதிகளோ இல்லை. குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். கூடுதல் வருமானத்துக்காக இரண்டு மாடுகளையும் வளர்த்து வந்தனர். ஆனால், அந்த இரண்டு மாடுகள்தான் ஒரு நாள் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றப் போகின்றன என்பதை அப்போது அமன்தீப் அறிந்திருக்கவில்லை.
மூன்று சகோதரிகளில் இளையவர் அமன்தீப். வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், வாழ்க்கை அவருக்குக் கொடுத்த பாடம் புத்தகங்களில் படித்ததைவிடக் கடினமானது. குடும்பத்தில் எதிர்பாராத இழப்பு ஏற்பட்டபோது, பெற்றோருக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். குடும்பத்துக்கு ஒரு மகன் இருந்தால் அவர் பார்த்துக்கொள்வார் என்ற சமூகத்தின் வழக்கமான எதிர்பார்ப்புக்கு மாறாக, “என் பெற்றோருக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்” என்று நினைத்தார். அந்த எண்ணம்தான் அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது.
அப்போது அவரிடம் இருந்தது இரண்டு கால்நடைகள் மட்டுமே. ஆனால், தொடங்குவதற்கு பெரிய முதலீடு வேண்டும் என்று அவர் காத்திருக்கவில்லை. கையில் இருந்ததை வைத்தே தொடங்கினார். அந்த இரண்டு மாடு
களைக்கொண்டு பால் பண்ணைத் தொழிலைத் தொடங்கிய அமன்தீப், அதில் கிடைத்த அனுபவத்துடன் அடுத்தடுத்த படிகளை எடுக்க ஆரம்பித்தார்.
தொழிலைத் தொடங்கிவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது என்பதையும் அவர் விரைவிலேயே புரிந்துகொண்டார். கால்நடைகளுக்கு நல்ல தீனி கொடுத்தும், முறையாகப் பராமரித்தும் எதிர்பார்த்த அளவுக்கு பால் கிடைக்கவில்லை. காரணம் என்ன என்பது அவருக்குத் தெரியவில்லை. அப்போதுதான் பர்னாலா மாவட்ட பால் வளத்துறையில் வழங்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்டார். அந்தப் பயிற்சி அவரது தொழிலுக்கே ஒரு புதிய பார்வையைத் தந்தது.
கால்நடைகளுக்கு அதிகமாக உணவு கொடுப்பது மட்டுமே போதாது; உணவில் தொடர்ச்சியான சமநிலை இருக்க வேண்டும், சரியான இனப்பெருக்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டார். அறிவைத் தேடி கற்றுக்கொண்ட அந்தத் தருணத்திலிருந்து அவரது பண்ணையின் வளர்ச்சியும் வேகமெடுக்கத் தொடங்கியது.
இன்று அந்த இரண்டு கால்நடைகள் 35 மாடுகள் மற்றும் எருமைகளாக வளர்ந்திருக்கின்றன. தினமும் சுமார் 200 கிலோ பால் உற்பத்தி செய்யும் அளவுக்கு அவரது பண்ணை வளர்ந்துள்ளது. அதில் அதிக பால் கொடுக்கும் ஒரு மாடு மட்டும் ஒரு நாளில் 40 முதல் 45 லிட்டர் வரை பால் தருகிறது என்று அமன்தீப் கூறுகிறார்.
ஆனால், அந்த வளர்ச்சியின் பின்னால் பணம் மட்டுமல்ல; கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருந்தது. பண்ணையை விரிவுபடுத்த வேண்டிய நேரத்தில் பால் வளத்துறையின் உதவியுடன் மானியத்துக்கும் கடனுக்கும் விண்ணப்பித்தார். விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் அவருக்கு கடன் கிடைத்தது. அந்தப் பணத்தையும் மானியத்தையும் பயன்படுத்தி கால் நடைகளுக்காக புதிய கொட்டகையை அமைத்தார். கொட்டகையை எப்படிக் கட்ட வேண்டும், கால்நடைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதுகூட ஆரம்பத்தில் அவருக்குத் தெரியாது. அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொண்டு அதை முறையாகச் செய்தார்.
அமன்தீப்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது வீடே அழகாகச் சொல்கிறது. ஒரு காலத்தில் மழை பெய்தால் கூரை வழியாகத் தண்ணீர் ஒழுகிய எளிய வீடு இருந்த இடத்தில், இன்று புதிய வீடு இருக்கிறது. குடும்பத்தின் பொருளாதார நிலையை மாற்றியதோடு, பெற்றோரின் வாழ்க்கைக்கும் ஆதரவாக நிற்கிறார் அமன்தீப்.
ஒரு பெண் குடும்பத்தைத் தாங்க முடியுமா என்ற கேள்விக்கு அவர் எந்த மேடையிலும் நின்று பதில் சொல்லவில்லை. பதிலாக, தினமும் அதிகாலை எழுந்து கால்நடைகளைப் பார்த்துக்கொண்டு, பால் உற்பத்தியை நிர்வகித்து, தொழிலை வளர்த்து, தனது குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி அந்தக் கேள்விக்கான பதிலை வாழ்க்கையிலேயே எழுதிக்கொண்டிருக்கிறார்.
அமன்தீப்பின் வெற்றியைப் பாராட்டிய பர்னாலா மாவட்ட துணை ஆட்சியர் டி. பெனித், அவர் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண் பால் பண்ணை விவசாயிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கால்நடைகளை முறையாக நிர்வகிக்கும் திறனில் அவரிடமிருந்து ஆண்களும் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமன்தீப்பின் கதை சொல்லும் மிகப் பெரிய செய்தி இதுதான். வாழ்க்கையில் நமக்குக் கிடைத்திருப்பது சிறியதாக இருக்கலாம். ஆனால், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் நம்முடைய அடுத்த நாளைத் தீர்மானிக்கிறது. இரண்டு மாடுகள் இருந்தன.
அதிலிருந்து ஒரு தொழில் உருவானது. அந்தத் தொழிலிலிருந்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கை மாறியது. இன்று அந்த முயற்சி 35 கால்நடைகளாக வளர்ந்திருக்கிறது.
பெரிய கனவுகளுக்கு எப்போதும் பெரிய தொடக்கம் தேவையில்லை. சில நேரங்களில், நம்மிடம் இருக்கும் இரண்டு மாடுகளோ, ஒரு சிறிய திறமையோ, ஒரு பழைய அறையோ, ஒரு சிறிய வாய்ப்போ போதும். அதில் நம்பிக்கை வைத்து முதல் அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருந்தால் போதும்.
அமன்தீப் கவுர் இன்று ஒரு பால் பண்ணையை மட்டும் நடத்தவில்லை. “பெண்களால் முடியுமா?” என்று கேட்கும் சமூகத்திடம், “முடியும்… முயன்றால் இன்னும் அதிகமாகவும் முடியும்” என்று தனது வாழ்க்கையால் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களை, வேலை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஏனெனில், தனது வாழ்க்கையில் அவர் கண்ட உண்மை ஒன்றுதான் - வாய்ப்பு நம்மைத் தேடி வர வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. நம்மால் முடிந்த இடத்தில், நம்மிடம் இருப்பதை வைத்து ஒரு வாய்ப்பை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.
இரண்டு மாடுகளுடன் தொடங்கிய அந்தச் சிறிய கனவு, இன்று ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாகவும், ஒரு கிராமத்தின் பெருமையாகவும், பல இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் கதையாகவும் மாறியிருக்கிறது.
- ஆ.கவின்



