Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

11000 கி.மீ தூரம்...கரடு முரடான பாதைகள்... கலக்கும் பைக் காதலி ரம்யா!

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 11,000 கிலோமீட்டர் பயணம் அதுவும் இருசக்கர வாகனத்தில். ஒரு தனி மனுஷியாக கடந்து வந்திருக்கிறார். மேலும் வழி நெடுக உள்ள மக்களுக்கு தற்கொலை வேண்டாம், என்கிற விழிப்பு உணர்வு பிரசாரத்தையும் செய்திருக்கிறார். எப்படி சாத்தியம் தடைகள் பல கடந்து போராட்டங்கள், நினைவுகள், உதவிகள் என யோசித்தபடி பேசத் துவங்கினார் ரம்யா அழகேந்திரன்.

உங்களைப் பற்றி சொல்லுங்க!

“எனக்கு பூர்வீகம் திருச்சி, பிறந்தது ஓசூர், இப்போ சென்னையில் இருக்கேன். செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட், சிங்கிள் மதர். வாழ்க்கையில் சில போராட்டமான தருணங்கள், பொருளாதார ரீதியாகவும் நிறைய பிரச்சனைகளை சந்திச்சேன். ஒரு கட்டத்தில் எனக்கே என்னை பிடிக்காமல் போக தற்கொலை செய்துக்கலாம் அப்படின்னு தோணுச்சு. அப்படியான ஒரு சமயம் தான் எனக்கு கை கொடுத்த மாதிரி இந்த பைக் தன்னுடைய ஹேண்ட் பாரை கொடுத்துச்சு. அங்கே முறுக்கினேன் இதோ இப்போ கே2கே ஃபினிஷர்.

சென்னை, கன்னியாகுமரி, காஷ்மீர் என 11,000 கிலோமீட்டர் பைக் பயணம் ... எந்த வண்டியில போனீங்க? ஓட்டுறதுக்கு வசதியா இருந்துச்சா?

‘ராயல் என்ஃபீல்ட் ஸ்கிராம் 411’ (Royal Enfield Scram 411) வண்டியில தான் போனேன். உண்மைய சொல்லணும்னா, ஆரம்பத்துல இந்த வண்டிய எடுத்ததுக்கே ரொம்ப ஃபீல் பண்ணேன்! ஏன்னா என்னால காலை கீழே ஊன முடியாத அளவுக்கு வண்டி உயரம் . எடையும் 198 கிலோ! வண்டி எடுத்த அன்னைக்கே பூஜைய போட்டு பஸ் டயர் கிட்ட கீழே விழுந்துட்டேன். கிளம்புறதுக்கு 10 நாளுக்கு முன்னாடி வரைக்கும் வண்டிய வித்துடலாமானு தோணுச்சு, அந்த அளவுக்கு பயம் அதிகமாயிடுச்சு. ஆனால் இன்னைக்கு என்னுடைய பெஸ்ட் நண்பன் என் வண்டிதான்.

அப்புறம் எப்படி அந்த பயத்தை கடந்து காஷ்மீர் பயணம் கிளம்புனீங்க?

மெக்கானிக் ஒருத்தர் வண்டியின் உயரம் கொஞ்சம் கம்மி பண்ணி கொடுத்தாரு. அப்புறம் பாக்ஸ், ஆக்சஸரீஸ் , பாதுகாப்புப் பொருட்கள்னு எடை ஏறிட்டே தான் இருந்துச்சு. கிளம்புற அன்னைக்கு எல்லா பொருட்களையும் கட்டிட்டு தான் முதல் தடவையா வண்டிய ஓட்டிப் பார்த்தேன். பயம் இருந்தாலும், ‘போயே ஆகணும்’னு முடிவெடுத்து பயணத்தை தொடர்ந்தேன்.

இந்த பயணத்துல கூட வந்தவங்க அனுபவம் எப்படி இருந்துச்சு?

நாங்க 9 பேரு, 8 பைக்ல கிளம்பினோம்; அதுல 4 பேரு பொண்ணுங்க. நிறைய போராட்டங்கள், நிறைய சப்போர்ட், ஒரு கட்டத்துல ஒவ்வொருவருடைய உடல் நிலையும் மாற ஆரம்பிச்சது. பல நேரங்கள் நான் மட்டும் தனியா பயணிக்க வேண்டியதாய் இருந்துச்சு. ஒரு முடிவா 3,000 கிலோமீட்டர் தனியாவே ஓட்டிட்டு சென்னை வந்து சேர்ந்தேன்.

இந்த 11,000 கிலோமீட்டர் பயணத்துல பெரிய சவாலா இருந்தது எது?

“காலநிலை தான். நாம நினைக்கிற மாதிரி ஒரு காலநிலை கூட நீங்க பார்க்க முடியாது. மணல் பாதைகள், மலைப் பாதைகள், திடீர்னு மாறின வானிலை, அப்புறம் சாலைகள்ல குறுக்க வர்ற மாடுகள்னு நிறைய சவால்கள். இதுல போகும்போது உச்சி வெயிலா இருக்கும் திரும்ப வரும் பொழுது முட்டி அளவுக்கு பனி நிரம்பி இருக்கும். பார்க்கவே ஆச்சரியமா இருக்கும். மலைகள்ல ஓட்டும்போது வண்டிய எங்கயும் நிறுத்த முடியாது, ஏன்னா வண்டி சரிஞ்சிடும். மழை, பனி, கரடுமுரடான பாதைனு உடம்பையும் மனசையும் ரொம்பவே சோதிச்சது. ஒரு சில மலைப்பாதைகளில் மயிரிழையில் உயிர் தப்பினேன் கூட சொல்லலாம்”.

சாப்பாடு, மாதவிடாய் (Periods) நேரம் இதெல்லாம் எப்படி சமாளிச்சீங்க?

திட்டமிட்டெல்லாம் சாப்பிட முடியல. வழியில மேகி, ரொட்டி, பருப்பு தான் கிடைச்சுது. உடம்புல தண்ணி சத்து குறையாம இருக்க நிறைய தண்ணி குடிச்சேன். காஷ்மீர் மலைப்பகுதியில இருக்கும்போது எனக்கு பீரியட்ஸ். ஆனா கடினமான வொர்கவுட் பழக்கம் இருந்ததால ரொம்ப சோர்வாகல. அங்க பொது கழிப்பறைகளை பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டம் தான். மேலும் பல நேரங்களில் எல்லாமே ஓப்பன் இடத்தில்தான்.

இந்த நீண்ட பயணத்தின் முக்கிய நோக்கம் என்ன?

‘தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுதான் முக்கிய நோக்கம்’. இதற்காக தமிழ்நாட்டுல 104, இந்தியா முழுக்க 14407-னு 24 மணி நேரமும் செயல்படுற உதவி எண்கள் இருக்குறதே நிறைய பேருக்கு தெரியறதில்ல. மன அழுத்தத்துல இருக்குறவங்களுக்கு நாம கொடுக்குற ஆதரவும், சரியான நேரத்துல கேட்கற உதவியும் எவ்வளவு முக்கியம்னு விழிப்பு உணர்வு ஏற்படுத்த தான் வழியெல்லாம் , மக்கள்கிட்ட பேசினோம். காரணம் ஈஸியா சொல்லிடலாம் கடந்து வாங்க அப்படின்னு, அது முடியாம தான் நிறைய பேர் எனக்கு தடுமாறி நிற்கறாங்க.

திருமணம் மற்றும் குழந்தை இப்படி பல வாழ்க்கை மாற்றங்களுக்கு பிறகும் ஒரு பெண் சாதிக்க முடியுமா? மத்த பெண்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?

இன்ஸ்பிரேஷன் வார்த்தைகள் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய சாதனையெல்லாம் செய்யலை. நானும் நிறைய தடைகளையும் சவால்களையும் சந்திச்ச ஒருத்திதான். ஆனால் நான் போன வழி நடுங்க எனக்கு சின்ன சின்ன பசங்க கூட வாழ்த்து சொல்லி வழி அனுப்பினாங்க. அதில் ஒரு எட்டு வயது சிறுவனின் உற்சாகமான வாழ்த்து எனக்கு இன்னமும் கண்ணுக்குள்ள நிற்குது. வண்டி ஓட்டுறதுக்கு உயரமோ, எடையோ முக்கியம் இல்ல, திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தா போதும். எல்லாரும் கீழே விழுறது சாதாரண விஷயம் தான், விழுந்தா திரும்ப எந்திரிச்சு ஓட்ட வேண்டியதுதான். பொண்ணுங்க சின்ன வண்டிகள் மட்டும்தான் ஓட்டணும் என நிறுத்திடாம, பெரிய பைக்குகளை எடுத்துட்டு தைரியமா வெளியே வரணும். வண்டி வாழ்க்கை ரெண்டுமே ஒண்ணுதான் உடல் வலிமையும், மனவலிமையும் இருந்தால் எதையும் சமாளிக்கலாம். நான் யார் என்கிறதை கரடு முரடான சாலைகளில் தான் கண்டெடுத்தேன், நீங்க யார் என்கிறதையும் தேடி கண்டுபிடிங்க. இன்னும் வாழ்க்கை அழகா இருக்கும். உற்சாகத்துடன் சொல்கிறார் இந்த பைக் காதலி ரம்யா அழகேந்திரன்...

- ஷாலினி நியூட்டன்