நேபாள பேரழிவில் இதுவரை 788 சடலங்கள் மீட்பு; 275 இந்தியர் உள்பட 2,485 பேர் மண்ணில் புதைந்த சோகம்..? 5வது நாளாக நடக்கும் மீட்பு பணியில் இதுவரை 7,514 பேர் மீட்பு
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 788 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமான 2,485 பேரை மீட்கும் பணிகளில் முப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை காலை 8.40 மணியளவில் போட்டேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வரலாறு காணாத திடீர் பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த கோர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு நிலப்பரப்பே அடையாளம் தெரியாத அளவுக்கு பெரும் பேரழிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை 788 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அதேசமயம் நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய 133 தொழிலாளர்கள், 589 வெளிநாட்டுப் பயணிகள், 64 உள்ளூர்வாசிகள், சுற்றுலா சென்ற 127 நேபாளிகள் உட்பட மொத்தம் 2,485 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 275 இந்திய யாத்ரீகர்களும் (100 தமிழர்கள் உள்பட) அடங்குவர்.
இன்றுடன் 5வது நாளாக அவர்களை மீட்க நேபாள ராணுவம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் முழு வீச்சில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரொக்க நிவாரணம், உணவுப் பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில், அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பாக, எதிர்காலத்தில் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் டி.என்.ஏ. மாதிரிகள் மற்றும் பிற சான்றுகளைப் பாதுகாப்பாக சேகரித்து வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வெளியிட்ட அறிக்கையில், ‘அடையாளம் காண முடியாத உடல்கள் மட்டுமே உரிய சட்ட விதிகளின்படி காற்று புகாத பைகளில் வைக்கப்பட்டு அரசு நிர்வாகத்தால் அடக்கம் செய்யப்படும். எனவே, இறந்தவர்களின் உடல்களை கையாள்வது தொடர்பாக பொதுமக்கள் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம். மீட்பு, சிகிச்சை, நிவாரணம் மற்றும் தகவல் தொடர்பு சீரமைப்பு பணிகளை அரசு முழு வீச்சில் துரிதப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் பாதுகாப்பதே அரசின் முதல் கடமையாகும். துயரத்தில் இருக்கும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து நிலைமை முழுமையாக சீரடையும் வரை களப்பணிகள் தொடரும்’ என்று தெரிவித்தார். மீட்கப்படும் பல சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையில் காணப்படுவதால், தொற்றுநோய் பரவாமல் தடுக்க டி.என்.ஏ. மாதிரிகளைப் பாதுகாப்பாக சேகரித்த பின்னர் உடல்களை உடனடியாக நல்லடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமானவர்களைக் கண்டுபிடிக்க 4,811 போலீசார், 4,203 ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவினர் 15 ஹெலிகாப்டர்களுடன் களமிறக்கப்பட்டு உள்ளனர். திமூரே பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ரசுவா நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சேற்றுக்குள் பல அடி ஆழத்தில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்களை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் வீரதீரமாக உயிருடன் மீட்டனர். இதுவரை நாடு முழுவதும் 7,514 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், நீர்மின் திட்ட சுரங்கங்களிலிருந்து 191 பேரும், மலையேற்றப் பாதைகளில் தவித்த 717 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ரூ.42,000 கோடி வரை நிதி தேவை
மழை மற்றும் பனிமூட்டம் குறைந்ததைத் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்கவும் உள்கட்டமைப்பை சீரமைக்கவும் சர்வதேச நாடுகளின் அவசர உதவியை நேபாளம் நாடியுள்ளது. இதுகுறித்து நேபாள நிதி அமைச்சர் ஸ்வர்ணிம் வாக்லே கூறுகையில், ‘வெள்ளத்தால் உருக்குலைந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மீண்டும் புனரமைக்க இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.33,500 கோடி முதல் ரூ.42,000 கோடி வரை நிதி தேவைப்படும்; சேத விவரங்கள் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, இந்தியா சார்பில் சிறப்பு சுரங்க மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவர்கள் நேபாளம் விரைந்துள்ளதுடன், 60 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் தற்காலிக பாலங்கள் அமைக்கும் தொழில்நுட்ப உதவிகளையும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக வழங்கியுள்ளது.



