6 மாத தவெக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த பரிசுகள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு: பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி காட்டம்
அவனியாபுரம்: விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தவெக அரசு ஆட்சி அமைத்து ஆறு மாதம் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடுமையான மின்வெட்டு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜய்யின் ஆட்சியில் வீர வசனம் பேசுகின்ற மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல்குமார் பொறுப்பேற்ற பிறகு தான் மின் கொள்முதல் கட்டண குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. மின் பற்றாக்குறை இருப்பதைப் போல ஒரு மாயையை, இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி 37 ரூபாய் 50 காசுக்கு மின் கொள்முதல் செய்ததாக 20 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள்.
கடந்த ஆட்சியில் இருபது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது. வருங்காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த டெண்டரை ரத்து செய்துள்ளார்கள்.
விஜய் முதலமைச்சர் ஆன பிறகு புழல் சிறைக்கு சென்று பார்வையிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அவர் ஆய்வு செய்து சென்ற பிறகு இரண்டு பேர் புழல் சிறையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள். அவர் என்ன ஆய்வு மேற்கொண்டார். ஜோசியர் சொன்னபடி அங்கு சென்று வந்தாரா? 17 கைதிகள் தேனி சிறையில் இருந்து சவுகரியமாக எப்படி தப்பித்தார்கள்? தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு குழந்தைகள் அதிகளவில் மாயமாகியுள்ளனர். குறிப்பாக சிறுமிகள். செஞ்சியில் 4 வயது சிறுமி காணாமல் போய் சுமார் ஒரு மாத காலமாகி விட்டது. பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல பட்டப்பகலில் தெருக்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு ஒழிந்து விட்டது இந்த ஆட்சியில்.
போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகளை கட்டுப்படுத்தப்பட வேண்டும். நாகப்பட்டினத்தில் ரூ.400 கோடி மதிப்புள்ள 135 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தவெக பிரமுகர் ஈடுபட்டுள்ளார். கடல் வழியாக இலங்கைக்கு இந்த போதைப்பொருள் கடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு எவ்வளவு தயார் செய்து, எத்தனை ஆயிரம் கோடிக்கு அவர் விற்பனை செய்திருப்பார்? இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? முழுமையான செய்தி இதுவரை கிடைக்கவில்லை. முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். இதுவரை செய்தியாளர் சந்திப்பு கூட கிடையாது. எத்தனை நிகழ்வுகள் நடந்தும் தற்போது வரை நிருபர்களை சந்திக்காத ஒரு முதல்வராக இருக்கிறார். விசித்திரமான முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிறார்.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. பருப்பு 70 சதவீதமும், எண்ணெய் 50 சதவீதமும் விலையேற்றம் கண்டிருக்கிறது. உணவு தானியங்களின் விலையும் அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு எல்லா இடங்களிலும் இனிப்பு பலகாரங்கள் தயார் செய்வது வழக்கம். ஆவினில் வாங்கலாம் என்றால், ஆவினிலும் விலையேற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறையில், கடந்த கால ஆட்சியில் சாலை பணிகளுக்கு போடப்பட்ட டெண்டரை ரத்து செய்துள்ளார்கள். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு டெண்டரும் புதிதாக விடவில்லை. சாலைகளும் அமைக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகிறது. தனுஷுக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள். விஜய்க்கு ஜாக்பாட் அடித்தது போல அவர்கள் நம்புகிறார்கள். அதனால் ஒருவரை பற்றி குறை சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள் போல் முதல்வரும் லீவில் இருக்கிறார்
‘‘அரசு ஊழியர்களைப் போல முதல்வர் காலை தலைமைச் செயலகம் வந்து மாலை 6 மணிக்கு செல்கிறார். சனி, ஞாயிறு அரசு ஊழியர்களுக்கான விடுமுறை போல இவரும் விடுமுறை எடுக்கிறார். மாலை 6 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. மாலை 6 மணிக்கு வீட்டுக்குள் சென்றால், அடுத்த நாள் காலை 9 மணிக்கு தான் அதிகாரிகளை சந்திப்பதாக எனக்கு தகவல் கிடைக்கிறது’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சசிகலாவுடன் சந்திப்பா?
நாளைக்கு (இன்று) பசும்பொன்னில் டிடிவி தினகரன், சசிகலாவை நீங்கள் சந்திக்க போவதாக தகவல் வருகின்றன. ஒருங்கிணைந்த அதிமுக செயல்பட போகிறீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘‘இது தவறான தகவல். டிடிவி.தினகரன், ஏற்கனவே எங்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சசிகலா அதிமுகவில் இணைவார் என வேண்டுமென்று திட்டமிட்டு ஊடகங்களில் அதிமுக பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உழைக்கின்ற உண்மையான விசுவாசிகள் அதிமுகவில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய பதவியும் மரியாதையும் வழங்கப்படும்’’ என்றார்.
கலையரசன் கைதுக்கு கண்டனம்
எடப்பாடி கூறுகையில், ‘‘பேராசிரியர் கலையரசனை கைதுதான் செய்ய முடியும். வேறு என்ன செய்ய முடியும். விலைவாசி பற்றி பேசினால் வாய்ப்பூட்டு சட்டம் போடுவார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
சோப்பு, ஷாம்ப்பா? அந்த அமைச்சருக்கு அதுதான் தெரியும்
சோப்பு ஷாம்பு போட்டு குளிப்பதால் ஆற்றில் நுரை வருகிறது என்று தவெக அமைச்சர் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “ அவர் இப்போது தான் கண்டு பிடித்து இருக்கிறார். அவருக்கு நோபல் பரிசு கொடுத்து விடலாம். ஏற்கனவே செல்லூர் ராஜூ நேற்று போட்டு தீட்டி விட்டார் அல்லவா?, இருக்கின்ற ஆலைகளை மூடத்தான் இந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். புதிய ஆலைகளை திறப்பதற்கு இந்த அமைச்சர்கள் இல்லை. பவானி ஆறு, நொய்யல் ஆறு, அமராவதி ஆற்றை சுத்தப்படுத்த ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது. இதை நான் சட்டமன்றத்திலும் சொன்னேன். அது அந்த அமைச்சருக்கு தெரிந்தால் தானே சொல்ல முடியும். இதைவிட்டு, சோப்பில் இருந்து வருகிறது. சாம்புவில் இருந்து வருகிறது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தெரியாது. தெரிந்தால் தானே சொல்வதற்கு. இனியாவது இந்த அமைச்சர்களுக்கு தெரிந்து இந்த கருத்தை சொல்லுங்கள்” என்று எடப்பாடி தெரிவித்தார்.


