வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையும் ஏதோ ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கமாகவே அமைவதுண்டு. டெல்லி விமான நிலையத்தில் சாதாரண அதிகாரியாகப் பணியாற்றி வந்த சுஃபியா சுஃபியின் வாழ்க்கையிலும் அதுவே நிகழ்ந்தது. நாள்தோறும் ஒரே மாதிரியான பணிச்சுமை, தொடர்ச்சியான மன அழுத்தம், வாழ்க்கையில் எந்தவொரு பெரிய நோக்கமும் இல்லாதது போன்ற உணர்வு ஆகியவை அவருக்குள் ஒருவித சலிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தின. அந்த மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கவும், தனது மன அமைதியை மீட்டெடுக்கவும் அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் ஓட்டம்.
ஆரம்பத்தில் தனது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள 3 கிலோமீட்டர் தூரம் மட்டும் ஓடத் தொடங்கிய சுஃபியாவிற்கு, நாளடைவில் அந்த ஓட்டமே தனது வாழ்வின் சுவாசமாக மாறியது.
தனது உண்மையான விருப்பம் ஓட்டப்பந்தயத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்த சுஃபியா, ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான அரசு வேலையைத் துறக்கத் துணிந்தார். சமூகத்தின் கேள்விகள், பொருளாதார ரீதியான பாதுகாப்பின்மை என பல சவால்கள் குறுக்கிட்டபோதிலும், தனது கனவின் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையால் அவர் முழுநேர ஓட்டப்பந்தய வீராங்கனையாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும், சாதனைகளை நோக்கிய அவருடைய பாதை மலர்ப்பாதையாக இருக்கவில்லை; மாறாக, அது கூர்மையான முட்களும் கற்களும் நிறைந்த கரடுமுரடான பாதையாகவே அமைந்தது.
சுஃபியாவின் முதல் வரலாற்றுச் சாதனை 2019ஆம் ஆண்டு அமைந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (K2K) 4,000 கிலோமீட்டர் தூரத்தை 87 நாட்கள் 2 மணி நேரம் 17 நிமிடங்களில் கடந்து தனது முதல் கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்தார். இதோடு நின்று விடாமல், இந்தியாவை இணைக்கும் ‘தங்க நாற்கரச் சாலை’ (Golden Quadrilateral) வழியாக 6,002 கிலோமீட்டர் தூரத்தை 110 நாட்கள் 23 மணி நேரம் 24 நிமிடங்களில் ஓடிக் கடந்து மற்றொரு உலகச் சாதனை படைத்தார். மேலும் மணாலி முதல் லே வரையிலான 485 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது, கத்தார் நாட்டின் வடக்கு எல்லை முதல் தெற்கு எல்லை வரை 200 கிலோமீட்டர் தூரத்தை 30 மணி நேரத்தில் கடந்தது என அடுத்தடுத்து கின்னஸ் சாதனைகளைக் குவித்தார்.
எனினும் பிறரின் சாதனைகளை முறியடிப்பதை விடத் தனது சொந்தச் சாதனையைத் தானே முறியடிப்பதே சுஃபியாவின் மிகப்பெரிய இலக்காக இருந்தது. 2019ஆம் ஆண்டு தாம் படைத்த 87 நாட்கள் சாதனையை மீண்டும் முறியடிக்கத் திட்டமிட்டு, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மீண்டும் ஓடத் தொடங்கினார். தினமும் சராசரியாக 50 முதல் 60 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்த அவர், இம்முறை 4,167 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 68 நாட்கள் 23 மணி நேரத்தில் நிறைவு செய்தார். இதன் மூலம் தனது சொந்த முந்தைய சாதனையை விட 18 நாட்கள் முன்பாகவே இலக்கை அடைந்து, தனது சொந்த சாதனையைத் தானே முறியடித்துப் புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்தார்.
இந்தப் பயணங்களின் போது இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகள் அவரை மிகக் கடுமையாக சோதித்தன. தென்னிந்தியாவின் கொளுத்தும் வெயிலில் உருகிய தார்ச் சாலைகளில் ஓடியபோது அவரது பாதங்களில் கடுமையான கொப்புளங்கள் ஏற்பட்டன. கால்களில் ஏற்பட்ட தசைப்பிடிப்புகளும், கடுமையான உடற்காயங்களும் ஒவ்வொரு அடியையும் நரக வேதனையாக மாற்றின. வடஇந்தியாவை அடையும் போது உடலை நடுங்க வைக்கும் கடும் குளிரும், கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்தில் ஏற்பட்ட ஆக்சிஜன் குறைபாடும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தின.
உடல் ரீதியான வலிகளை விடவும், தனிமை அளித்த மனரீதியான பயமே அவரை அதிகளவில் வாட்டியது.‘‘இனி நம்மால் முடியாது, இத்துடன் நிறுத்திவிடலாம்” என்று உடல் கதறிய தருணங்களில், தன் மீதான நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் மட்டுமே அவர் துணையாகக் கொண்டார். காயங்களுக்குக் கட்டுப்போட்டுக் கொண்டு, வலியை மறந்து மீண்டும் மீண்டும் அவர் முன்னோக்கி அடி எடுத்து வைத்தார்.
தற்போது உலகளவில் புகழ்பெற்ற அல்ட்ரா-ரன்னராக உருவெடுத்துள்ள சுஃபியா, தனது அடுத்தகட்ட மாபெரும் இலக்காக ‘ரன் அரவுண்ட் தி குளோப்’ (Run Around the Globe) என்ற உலகைச் சுற்றி ஓடும் பயணத்திற்குத் தயாராகி வருகிறார். சுமார் 30,000 கிலோமீட்டர் தூரத்தை 680 நாட்களுக்குள் ஓடிக் கடப்பதே அவரது அடுத்த இலக்கு. இதை அவர் நிறைவு செய்யும்போது உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெறுவார். சுஃபியாவின் இந்த நெகிழ்ச்சியான வாழ்க்கைப் பயணம், தடைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், மன உறுதியோடு போராடினால் எந்தவொரு சாதாரண மனிதனும் சரித்திர சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை உலகுக்கு ஆழமாக உணர்த்துகிறது.
- எஸ். விஜயலட்சுமி.



