ஜோகனஸ்பர்க்,: தென்னாப்பிரிக்காவில் சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பயணிகளுக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஹான்டா வைரஸ் என்பது, உணவுகளை கொறித்து சாப்பிடும் எலிகள் போன்றவற்றின் சிறுநீர், மலம் ஆகியவற்றின் மூலம் பரவும் தொற்றாகும். இந்நிலையில் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் இருந்து அன்டார்டிகா வழியாக ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே என்ற தீவு நாட்டுக்கு 150 பயணிகளுடன் எம்வி எம்வி ஹோன்டியஸ் என்ற நெதர்லாந்து நாட்டின் சுற்றுலா சொகுசு கப்பல் கடந்த 4ம் தேதி புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த சிலருக்கு ஹான்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். இதையடுத்து அந்த கப்பல் கேப் வெர்டே தீவுகளுக்கருகே நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்த பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மேலும் 4 பேருக்கு ஹான்டா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கப்பலை விட்டு வௌியேற கேப் வெர்டே அரசு அனுமதி மறுத்துள்ளது. அதேசமயம், அதிலுள்ள பயணிகளின் சுகாதார நிலைமை பற்றி உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆய்வு செய்து வருகிறது.



