Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கல்வி கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு படிப்பை பாதியில் கைவிடும் 43% இந்திய மாணவர்கள்: சர்வதேச நிறுவன அறிக்கையில் தகவல்

சென்னை: வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற இந்திய மாணவர்களின் கனவுகளில் தற்போதைய பொருளாதாரச் சூழலும், விசா நடைமுறைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஐடிபி என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘எமர்ஜிங் பியூச்சர்ஸ்’ என்ற புதிய அறிக்கையின்படி, வெளிநாட்டு படிப்பை கைவிட்ட இந்திய மாணவர்களில் 43% பேர் கல்விக்கட்டணம் மிக அதிகமாக இருப்பதே முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இன்றைய சூழலில் இந்திய மாணவர்கள் வெளிநாட்டு படிப்பை வெறும் பட்டத்திற்காக பார்க்காமல், ஒரு சிறந்த முதலீடாகவே பார்க்கின்றனர். படிப்பின் தரம் என்பதை தாண்டி, படித்து முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்பிற்கே 41% இந்திய மாணவர்கள் முதலிடம் தருகின்றனர். முன்பை போல பல நாடுகளுக்கு விண்ணப்பித்து குழம்பிக் கொள்ளாமல், தங்களுக்கு சாதகமான ஒரே ஒரு நாட்டை மட்டும் தேர்ந்தெடுத்து (19%லிருந்து 22% ஆக உயர்வு) துல்லியமாகத் திட்டமிடும் போக்கு இந்திய மாணவர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது.

எந்த நாடு சிறந்தது என்பதை விட, எந்த நாடு என்னை தவிக்க விடாது என மாணவர்கள் ஆராய்ந்து அதனையே தேர்வு செய்வதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்நிலையில், இந்திய மாணவர்கள் தங்கள் வெளிநாட்டு படிப்பை கைவிடுவதற்கு கல்விக் கட்டண உயர்வு (43%) - தங்களால் ஏற்க முடியாத அளவிற்கு கல்விக்கட்டணம் உயர்ந்துள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். வாழ்க்கைச் செலவினங்கள் (32%) - வெளிநாடுகளில் தங்குவதற்கும், அன்றாடத் தேவைகளுக்குமான செலவுகள் அதிகரித்துள்ளன. விசா பெறுவதில் சிக்கல் (28%) - விசா நடைமுறைகளில் உள்ள கடுமையான விதிகளும், தாமதங்களும் மாணவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. உலகளாவிய அளவில் பார்க்கும்போது, சுமார் 50% மாணவர்கள் கல்விக்கட்டண உயர்வால் தங்கள் வெளிநாட்டு படிப்பு திட்டங்களை கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.