Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்: சென்னையிலும் அறிமுகம்!!

சென்னை: சமீப காலங்களில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதில் மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

இதற்கிடையே, ஈரான் போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், சிலிண்டர் முன்பதிவு செய்த வெறும் நான்கு மணி நேரத்திற்குள் வீடு தேடி டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 10 கிலோ எடை கொண்ட ‘இன்டேன் எக்ஸ்ட்ரா லைட்’ சிலிண்டரை அறிமுகப்படுத்தியது. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் உலோக சிலிண்டர்களுக்கு மாற்றாக, ஒளி ஊடுருவக்கூடிய சிறப்பு வகை பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் பொருட்களால் இந்த சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதம் உள்ளது என்பதை வெளிப்புறத்தில் இருந்தே எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இன்டேன் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரைப் பெறுவதற்காக ரூ.3,000 பாதுகாப்பு வைப்பு தொகையாகச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்தியிருந்தால், மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தி எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது சென்னை மற்றும் புதுச்சேரிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 10 கிலோ எடை கொண்ட இன்டேன் எக்ஸ்ட்ரா லைட் சிலிண்டரை முன்பதிவு செய்து, வெறும் நான்கு மணி நேரத்திற்குள் வீட்டிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் விரைவில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.