தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் கைவரிசை: நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்பட தென்மாநிலங்களில் கோயில் திருவிழாக்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் நகை பறிப்பு, பிக் பாக்கெட் போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பெண்களை வயநாடு போலீசார் கர்நாடக மாநிலத்தில் கைது செய்தனர். கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லியில் பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசைக்கு பலி தர்ப்பணம் நடத்த ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி பலி தர்ப்பணம் நடத்துவதற்காக வந்த ஒரு பெண்ணிடம் இருந்து ஒன்றே முக்கால் பவுன் செயின் திருடப்பட்டது. இதுகுறித்து திருநெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த திருட்டின் பின்னணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மிகப்பெரிய கும்பல் இருப்பது தீவிர விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து திருட்டுக் கும்பலை பிடிப்பதற்காக மானந்தவாடி ஏஎஸ்பி கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் திருட்டுக் கும்பல் சென்னையில் இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் அந்தக் கும்பல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்களது கைவரிசையை காட்டுவதற்காக கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் மங்களூரு விரைந்தனர். ஆனால் அந்தக் கும்பல் அங்கிருந்து உடுப்பிக்கு சென்றது தெரியவந்தது. போலீசாரும் விடாமல் அவர்களை பின்தொடர்ந்து உடுப்பிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தீவிர விசாரணையில் அங்குள்ள மல்பே கடற்கரையில் வைத்து திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (45), தேவி (53), மதுரையை சேர்ந்த பொன்னி (39) என்பது தெரியவந்தது. போலீசார் இவர்களை வயநாட்டுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த திருட்டு கும்பலில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் கூட்டமாகவும், சிறிய சிறிய குழுக்களாகவும் கோயில் திருவிழாக்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்று தங்களது கைவரிசையை காட்டுவார்கள்.
திருடியவுடன் அந்தப் பொருட்கள் நிமிட நேரத்தில் கைமாறி சென்று விடும். இதனால் இவர்களை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இந்தக் கும்பல் கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட மாநிலங்களுக்கும் சென்றும் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு 3 பெண்களையும் போலீசார் மானந்தவாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.