ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிர நக்சல்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் கொண்டகான் மற்றும் நாராயண்பூர் மாவட்ட எல்லையில் உள்ள கிலாம்-பர்கம் கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சல்களின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு அங்கிருந்து ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலியான இருவரின் தலைக்கும் ரூ.8லட்சம் மற்றும் ரூ.5லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.