ஜகார்த்தா: இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் கெமாரோயன் என்ற பகுதியில் பல்வேறு அலுவலகங்களை உள்ளடக்கிய 7 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று நண்பகல் கட்டிடத்தின் முதல்மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது பிற தளங்களுக்கும் மள,மளவென வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழந்ததால் அங்கிருந்த கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் 29 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீ விபத்தில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 15 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உள்பட 22 பேர் தீயில் கருகியும், மூச்சு திணறல் ஏற்பட்டும் பலியாகினர். மேலும் தீ விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான கட்டிடம் டிரோன்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் அலுவலகம் எனவும், அங்கு பரிசோதனை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


