Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

21 தமிழர்கள் நள்ளிரவு சென்னை திரும்பினர்: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு தொடர்ந்து ஆய்வு

புதுடெல்லி: நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியான லங்தாங் லிருங் சிகரத்தின் அருகே, கடந்த 26ம் தேதி கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த ராட்சத பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்தது. இது லெண்டே ஆற்றில் விழுந்து தற்காலிக அணையை உருவாக்கியது. அடுத்த முப்பது நிமிடங்களில் அந்த அணை உடைந்து, திரிசூலி மற்றும் போதே கோசி ஆறுகளில் சுமார் ஒன்பது மீட்டர் உயரத்திற்கு ஆக்ரோஷமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பயங்கர பேரிடரில் சிக்கி இதுவரை 547 க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர்; 1,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மேலும் பல முக்கிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பத்து நீர்மின் நிலையங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்ற புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 103 பேர் என மொத்தம் 106 பேர் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டனர். இதில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு பஸ்சில் இருந்த 21 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், ரசுவா பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள 85 தமிழர்களின் நிலைமை குறித்த தற்போது வரையில் தகவல் அறிய முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய்முதல்வரின் உத்தரவின்பேரில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜமோகன், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வினோத், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகிய நான்கு அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்ட குழு நேற்று முன்தினம டெல்லிக்கு விரைந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ள அமைச்சர்கள் குழு, ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதையடுத்து நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21பேர் நேற்று மாலை பத்திரமாக டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர்கள் கொண்ட குழு, நேபாள வெள்ளம் குறித்து கேட்டறிந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் முதல் உதவி மற்றும் உணவு ஆகிவை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு எட்டு மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

வெளியுறவு செயலாளரிடம் கோரிக்கை

ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்திரியை தமிழக அமைச்சர்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது நேபாளத்தில் ஏற்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தது மட்டுமில்லாமல், நேபாளத்தில் சிக்கி உள்ள அனைத்து தமிழர்களையும் பாதுகாப்புடன் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.