*15, 16ம் தேதி நடக்கிறது
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், 75 தேர்வு மையங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 15ம் தேதி, 16ம்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வை 20,500 பேர் எழுதுகின்றனர் என கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தகுதி தேர்வு தாள் - I மற்றும் தாள்- II குறித்து அலுவலர்களுடனான கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலெக்டர் சதீஸ் பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 தாள் -Iஐ வரும் 15ம் தேதி 13 தேர்வு மையங்களில் 3,511 தேர்வர்களும், தாள் - IIஐ வரும் 16ம் தேதி 62 தேர்வு மையங்களில் 16,989 தேர்வர்களும் எழுதவுள்ளனர். மொத்தம் 75 தேர்வு மையங்களில் 20,500 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தாள் -I 15ம் தேதி 4 எண்ணிக்கையிலான வழித்தடங்களிலும், தாள் -II 16ம் தேதி 19 எண்ணிக்கையிலான வழித்தடங்களிலும் வினாத்தாள்கள் எடுத்து செல்லும் வாகனத்துடன், தேர்வு நடைபெறும் நாட்களில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதம் தாங்கிய காவலர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணிநேரமும் ஆயுதமேந்திய காவலர்கள், வினாத்தாள் பெறப்பட்ட நாள் முதல் தேர்வு முடியும் நாள் 16ம் தேதி வரை பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்தல் வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களை கண்காணிக்கவும், வெளி ஆட்கள் தேர்வு மையத்திற்குள் அத்துமீறி நுழையாமல் இருக்கவும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காலை 8 மணி முதல் தேர்வு முடிந்து, விடைத்தாள் கட்டுகள் தேர்வு மையத்தை விட்டு எடுத்துச் செல்லும் வரை, பாதுகாப்பு பணிக்கு காவலர் நியமனம் செய்தல் வேண்டும்.
மேலும், 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய நாட்களில் தேர்வு நடைபெறும் மையங்களில், தேர்வு எழுதும் இருபால் தேர்வர்களை சோதனையிட, ஆயுதம் தாங்கிய ஆண் காவலர் ஒருவர் மற்றும் பெண் காவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.
இத்தேர்வினை சிறப்பாக நடத்தும் பொருட்டு, மாவட்ட கண்காணிப்பு தேர்வுக்குழு உறுப்பினர்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்திடவும், தேர்வு மையங்களுக்கு தேவையான காவல் துறை பாதுகாப்பு வசதிகள், குடிநீர் வசதி மற்றும் தடையில்லா மின்சாரம் மற்றும் இதர வசதிகள் செய்யும் பொருட்டு தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து துறை அலுவலர்களும் தேர்வு சிறப்பான முறையில் நடைபெற தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு மையங்களில் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு அறைக்கு செல்ல, வழிகாட்டி விவரங்களை சரியான முறையில் அறிவிப்பு பலகைகளில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
