தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

2026 பேரவை தேர்தலில் மேற்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் தோல்வி தொடங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உடுமலை: வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் துவங்க உள்ளது என உடுமலையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருப்பூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் கள ஆய்வு பயணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தார். உடுமலைக்கு வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இரவு அங்கேயே தங்கினார். நேற்று காலை உடுமலை நேதாஜி மைதானத்தில் புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் தொடக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி ரூ.949.53 கோடி மதிப்பில் முடிவுற்ற 61 பணிகளை திறந்து வைத்து, ரூ.182.6 கோடி மதிப்பில் 35 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.295.29 கோடி மதிப்பில் 19 ஆயிரத்து 785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ரூ.1,426.89 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம் திருப்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு, திராவிட மாடல் ஆட்சியில், கடந்த 4 ஆண்டு காலம் செய்யப்பட்டுள்ள பணிகள் ஏராளம். திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த 4 ஆண்டில் மொத்தம் ரூ.10,491 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் சொல்கிறேன். கடந்த 2006-11 கலைஞர் ஆட்சியில் 3 ரயில்வே பாலம் உள்பட 5 பாலம் கட்ட கலைஞர் ஆணையிட்டார்.

ஆனால், அதன்பிறகு ஆட்சி மாறியதால், அந்த பணிகளையெல்லாம் முடக்கி விட்டார்கள். இப்போது நமது ஆட்சியில் அந்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அவினாசி-அத்திக்கடவு திட்டம் நமது ஆட்சியில் துவக்கப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற சாதனை திட்டங்கள் இம்மாவட்டத்துக்கு இன்னும் வர உள்ளது. நாம், இப்படி சாதனை மேல் சாதனை திட்டங்கள் கொண்டு வரும் வேளையில், தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டல வளர்ச்சிக்கு அதிக திட்டங்கள் தந்துள்ளோம். தொடர்ந்து நாங்கள்தான் திட்டங்களை கொண்டுவரப்போகிறோம்.

இதில், எந்த மாற்றமும் இல்லை. ஆனால், எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இந்த பகுதியில் இருந்து பிரசாரத்தை துவக்கினார் என தெரியவில்லை. வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் தேர்தல் தோல்வி இங்கு இருந்துதான் துவங்கப்போகிறது. ஏற்கனவே உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்த பகுதியில் இருந்துதான் தோல்வி துவங்கியது. அதுபோல், வரும் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி தொடரும். சுந்தரா டிராவல்ஸ் பஸ்சில் சென்று, எடப்பாடி பழனிசாமி ஊர், ஊராக பொய் பிரசாரம் செய்து வருகிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த வயிற்று எரிச்சல் தாங்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருகிறார்.

நமது ஆட்சியில், மக்களுக்கு நல்லது நடந்து விடக்கூடாது என்பதால், அவர், மக்கள் நலத்திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இது, உங்களுக்கு அவமானமாக இல்லையா? பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என நீங்கள் பங்கு வகிக்கும் ஒன்றிய பா.ஜ அரசு அறிக்கை வழங்கி உள்ளது. இப்படி தொடர்ந்து அடிமேல் அடி விழுகிறது, எடப்பாடி பழனிசாமிக்கு. இதனால், விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டார் அவர். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட முதல்வர் என்ற மரியாதைகூட தராமல், என்னை ஒருமையில் பேசி வருகிறார்.

நான், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. எங்கள் பணி, மக்கள் பணி. அதை சிறப்பாக செய்து வருகிறோம். உங்களுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனது பேச்சை குறைத்து, செயலில் காட்டி வருகிறேன். தன்னை, எம்ஜிஆர் என நினைத்து எடப்பாடி பழனிசாமி சவுண்ட் விடுகிறார். பிரசாரம் முடிந்து, அவரது வண்டி கிளம்பியதும், அவரது கட்சிக்காரர்களே என்ன பேசுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது எந்த சதி திட்டமும் நம்முன் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.

நாம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை கொடுத்து வருகிறோம். அனைவருக்குமான நல்லாட்சி நடத்தி வருகிறோம். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும், உங்கள் விருப்பம் எல்லாம் நிறைவேறும். திராவிட மாடல் 2.0-ல் நிறைவேறாத திட்டங்கள் இனி நிச்சயம் நிறைவேறும். இது உறுதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, சு.முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி தொகுதி எம்.பி., ஈஸ்வரசாமி, திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

உடுமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பொள்ளாச்சி புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பிஏபி திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மற்றும் வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆகியோருக்கு நீர்வளத்துறை சார்பில் ரூ.2.30 கோடியில் அமைக்கப்பட்ட முழு உருவச்சிலைகளையும், ரூ.4.30 கோடி மதிப்பிலான நினைவரங்கம் மற்றும் ரூ.2.83 லட்சத்தில் பரம்பிக்குளம் ஆழியார் அணை கட்டுமான பணியின்போது, உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தார்.

* 2 கி.மீ. ரோடு ஷோ

உடுமலையில் உள்ள திருப்பூர், பொள்ளாச்சி சாலை கார்னர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவாக நடந்து சென்றார். சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கைகளை அசைத்தும், கோஷமிட்டும் முதல்வரை வரவேற்றனர். முதல்வரை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் சிவப்பு, கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். பலரும் முதல்வருடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

* திருப்பூர் மாவட்டத்திற்கு 9 புதிய திட்டங்கள்

1. கோவை, திருப்பூர் மாவட்ட வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் நீராறு-நல்லாறு-ஆனைமலையாறு திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக, கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கனவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

2. பிஏபி திட்டத்தில் வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதற்காக இந்த ஆண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தூர் வாரப்படும்.

3. திருப்பூர் மாநகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நவீன வசதியுடன் மாவட்ட நூலகம் ரூ.9 கோடியில் அமைக்கப்படும். 4. திருப்பூர் மாநகராட்சியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

5. காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் ரூ.11 கோடியில் நிறைவேற்றப்படும்.

6. தாராபுரத்தில் வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் உப்பாறு குறுக்கே ரூ.7.60 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

7 ஊத்துக்குளி வட்டத்தில் ரூ.6.50 கோடியில் புதிய வெண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும்.

8. உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலைக்கு, சாதிக்பாட்சா பெயர் சூட்டப்படும்.

9. அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்பு பணிக்கு விரைவில் வல்லுனர் குழு அமைக்கப்படும்.