Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

186 ஏக்கர் தரிசு நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தவறாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வானை சிங்காரவேலு என்பவர் கடந்த 2022ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், கடலூர் மாவட்டம், சிலம்பநாதன்பேட்டை ஊராட்சியில் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 186 ஏக்கர் தரிசு நிலத்தை அரசு ஒப்புதல் பெறாமல், நஞ்சை நிலமாக வகை மாற்றம் செய்து பலருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஏழுமலை, தரிசு நிலம், வனப்பகுதி, கிராமநத்தம், நீர்நிலை ஆகிய நிலங்களை நில நிர்வாகம் கமிஷரிடம் அனுமதி பெறாமல் முன்னாள் எம்.பி., ரமேஷ், திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்தில் முந்திரி ஆலைகள், நீச்சல் குளம் உள்ளிட்டவைகளை அமைத்து வாழுகின்றனர் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, நிலம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடலூர் கலெக்டருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை அமல்படுத்தாததால் நில நிர்வாக கமிஷனர், கடலூர் கலெக்டர் உள்ளிட்டோருக்கு எதிராக தெய்வானை சிங்காரவேலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நில நிர்வாக கமிஷனர், கலெக்டர் உள்ளிட்டோரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகளும் ஆஜராகினர்.

இதையடுத்து நீதிபதி, அரசு நிலத்தை தனியாருக்கு வழங்கிய விவகாரத்தில் அதிகாரிகளின் பெரிய அளவிலான கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. தரிசு நிலத்தை பட்டா நிலமாக மாற்றி, அதை ஆடம்பர தேவைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் 3 மாதங்களில் விரிவான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த அக்டோபர் 18ம் தேதி நில நிர்வாக கமிஷனர் பிறப்பித்த உத்தரவும் இணைக்கப்பட்டிருந்தது. அதில், மனுதாரர் குற்றம் சாட்டியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 178.82 ஏக்கர் (வண்டிப்பாதை தவிர்த்து) புன் செய் நிலங்கள் காப்புக் காடுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டு தரிசாக பதிவு செய்யப்பட்ட நிலையில், நிலங்களை அரசிடம் இருந்து நில ஒப்படைப்பு பெற்றது தொடர்பான ஆவணங்களை யாரும் தாக்கல் செய்யவில்லை. கிரைய ஆவணங்கள் அடிப்படையில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த பட்டாவை ரத்து செய்து, 1924ம் ஆண்டு ‘அ’ பதிவேட்டில் உள்ளவாறு தரிசு எனற வருவாய் ஆவணங்களில் பதிவு செய்யுமாறு கடலூர் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.