சென்னை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் உட்பட, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களை, வரும் 2035 செப்டம்பர் 30 வரை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியிட்டதில், ஒன்றிய அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி, 15 ஆண்டுகள் முடிந்த, அரசு வாகனங்களின் பதிவை ரத்து செய்து, அதை பழைய இரும்பாக விற்க வேண்டும். ஆனாலும், அரசுத் துறை பணிகளும், பொது போக்குவரத்தும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 15 ஆண்டுகள் கடந்த அரசு வாகனங்களை இயக்க, தமிழக அரசு கால நீட்டிப்பு வழங்கி வருகிறது.
தமிழக அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், 40,296 வாகனங்கள், கடந்த 15 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகின்றன. இவற்றை இயக்க வழங்கப்பட்ட காலக்கெடு நேற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து, இந்த 40,296 அரசு வாகனங்களையும், மேலும் ஒன்பது ஆண்டுகள், அதாவது வரும் 2035ம் ஆண்டு செப்டம்பர் 30 வரை இயக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
