குளிரூட்டும் வசதியின்றி கொண்டு சென்ற 1,096 லிட்டர் பால் பறிமுதல்
*உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி
விருதுநகர் : விருதுநகர் ரயில்வேபீடர் ரோடு சூப்பர் மார்க்கெட்டில் உரிமமின்றி மறுபொட்டலமிட்ட 107 கிலோ பருப்பு வகைகள், மினிவேனில் குளிரூட்டப்படாமல் கொண்டு சென்ற 1096 லிட்டர் பால் ஆகியவற்றை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தினர். அந்நிறுவனம் மொத்தம், சில்லறை விற்பனைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று விட்டு சூப்பர் மார்க்கெட் ப்ராண்ட் பெயரில் பருப்பு உள்ளிட்ட உணவு, சிறுதானிய பொருட்களை மறுபொட்டலமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மறுபொட்டலமிடப்பட்ட 107.5 கிலோ பருப்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்நிறுவனத்தின் லேபிளில் குறிப்பிட்ட எடையில் பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்கள் இல்லாததினால் உரிம விதிமீறல் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதை தொடர்ந்து விருதுநகர் ஆத்துப்பாலம் அருகில் உணவு பாதுகாப்பு உரிமம் ஏதுமின்றி, வெப்பநிலை கட்டுப்பாட்டு சாதனம் எதுமில்லாமல் மினிவேனில் 28 கேன்களில் 1096 லிட்டர் குளிரூட்டப்பட்ட பால் விருதுநகரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பால்கோவா தயாரிக்க கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பாலின் தரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குளிரூட்டும் வசதி இல்லாத மினிவேனில் கொண்டு செல்லப்படும் பால் கெட்டுவிடும் என்பதால் பாலின் அவசியம் கருதி பறிமுதல் செய்யப்பட்டது. 1096 லிட்டர் பால் அரசு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.