Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது: வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வந்தாலும் வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்துள்ளது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, ராஜபாளையம், மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, முத்துப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நெய்வேலி, புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் நேற்று மதியத்துக்கு பிறகு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்துள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில், நேற்று அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி, வேலூர் மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தர்மபுரி, சேலம், மதுரை மாவட்டங்களில் 102 டிகிரி, கோவை, திருச்சி, திருத்தணி 100 டிகிரி, தர்மபுரி 99 டிகிரி, சென்னை 98 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நேற்று சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்துள்ள நிலையில், இன்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

அதன் தொடர்ச்சியாக மே 2ம் தேதி வரையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் இன்று முதல் மே 1ம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மே 1ம் தேதி வரையில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி இருக்கும் வாய்ப்புள்ளது.