புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்த 10 பள்ளி மாணவர்கள் காயம்: கிராம மக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு பேருந்தில் திடீரென கதவை திறந்ததால் பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களை இறக்கிவிடும் நோக்கில் திடீரென ஓட்டுநர் கதவை திறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ரெங்கம்மாள்சத்திரம் அருகே கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசுப் நகர பேருந்தில் அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் ஏறியுள்ளனர். அப்போது கூட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி அந்த மாணவர்களை நடத்துனரும் பேருந்தில் இருந்தவர்களும் கீழே இறங்கச் சொல்லியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நடத்துனர், அந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்க கதவைத் திறந்தாகவும் அப்போது மாணவர்கள் வரிசையாக கீழே விழுந்துள்ளனர். இதில் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்த பழங்குடியின கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை- திருச்சி நெடுசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



