Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி : கண்ணீர் மல்க வெளியேறினார்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அதிர்ச்சி தோல்வியடைந்ததால் கண்ணீருடன் வெளியேறினார். நடப்பு யுஎஸ் ஓபனில் தனது 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் களமிறங்கிய சாதனை வீரர் ஜோகோவிச், முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் (25வது வயது, 49வது ரேங்க்) உடன் மோதினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை மரியானோ 7-6 (7-5) என கைப்பற்றி முன்னிலை பெற்றார். நியூயார்க் நகர வெய்யிலை சமாளிக்க முடியாமல் சோர்வடைந்த ஜோகோவிச், தலையில் ஐஸ்கட்டி பையை வைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

தொடர்ந்து மன உறுதியுடன் விடாப்பிடியாகப் போராடிய அவர் 7-5, 6-4 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். ஆனாலும், இளம் வீரர் மரியானோ நவோன் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவிக்க, வெயிலால் அவதிப்பட்ட ஜோகோவிச் ஆட்டத்தின் இடையே பல முறை வாந்தி எடுத்தது அவரை மேலும் சோர்வடையச் செய்தது. இதனால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய ஜோகோவிச், தோல்வி உறுதி என்பதை உணர்ந்ததால் பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் விம்மி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. கேலரியில் இருந்த ஜோகோவிச்சின் மனைவி யெலனாவும் கண் கலங்கினார்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் 4 மணி, 36 நிமிட நேரத்துக்கு கடுமையாகப் போராடிய ஜோகோவிச் 6-7 (5-7), 7-5, 6-4, 2-6, 1-6 என 5 செட்களில் தோல்வியைத் தழுவி கண்ணீர் மல்க வெளியேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் முதல் சுற்றில் தொடர்ச்சியாக 78 வெற்றிகளைக் குவித்திருந்த அவரது சாதனைப் பயணம், மரியானோவிடம் கண்ட அதிர்ச்சி தோல்வியால் முடிவுக்கு வந்தது. 2006 ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் பால் கோல்ட்ஸ்டீனுக்கு எதிராக தோற்றிருந்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக தோற்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீரர்கள் மெட்வதேவ் (ரஷ்யா), டாமி பால் (அமெரிக்கா), ஷபாவலாவ் (கனடா) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம் வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 6-7 (6-8) என்ற நேர் செட்களில் சக வீராங்கனை சோபியா கெனினிடம் 1 மணி, 48 நிமிடம் போராடி தோற்றார். ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), ஸ்விடோலினா (உக்ரைன்), லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா பிளிஸ்கோவா (செக்.) ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.