மேக்கப் உலகில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ‘கிளாஸ் ஸ்கின்’ (Glass skin) என்ற அதிகப்படியான பளபளப்பு ட்ரெண்டிற்கு தற்போது சற்று ஓய்வு கிடைத்துள்ளது. அதற்குப் பதிலாக, இயற்கையான மென்மையையும் மிருதுவான தோற்றத்தை தரும் ‘வெல்வெட் ஸ்கின்’ (Velvet skin) அழகு ஆர்வலர்கள் மற்றும் மேக்கப் கலைஞர்கள் மத்தியில் புதிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மணப்பெண்கள் மேக்கப் உலகில் இப்போது இந்த வெல்வெட் ஸ்கின் தோற்றம் அதீத பிரபலம். இப்போதைய கேமராக்கள், லைட்டிங் எல்லாம் உள்ளது உள்ளபடி அப்படியே காட்டுவதால் அதீத கிளாஸ் ஸ்கின் லுக் பளிச்சென எதிர் வெளிச்சத்தைக் கொடுத்து புகைப்படத்தை ப்ளிச் செய்தது போல் மாற்றிவிடும். மேலும் செயற்கையாகவும் இருக்கும் என்பதால் பளபள கிளாஸ் சருமம் டிரெண்ட் தற்போது மாறி வெல்வெட் ஸ்கின் டிரெண்ட் அதிகரித்து வருகிறது.
பட்டுத் துணியைத் தொட்டால் எப்படி மிருதுவாக இருக்குமோ, அதே உணர்வை முகத்தில் சாத்தியமாக்குவதுதான் இந்த லுக்கின் அடிப்படை. இது முழுமையான மேட் (Matte) தோற்றமும் அல்ல; கிளாஸ் ஸ்கின் போல பளபளக்கும் தோற்றமும் அல்ல. சருமத்தின் இயல்பை தக்கவைத்து, மெல்லிய கோடுகள் மற்றும் சருமத்துளைகளை “மங்க” (Blur) செய்து காட்டும் ஒரு முறை.
‘மேக்கப்’ போட்டதே தெரியக்கூடாது!
வெல்வெட் ஸ்கின் லுக்கின் மிகப்
பெரிய சிறப்பம்சமே, பல அடுக்கு மேக்கப் போட்டிருப்பதை வெளிக்காட்டாமல் இயற்கையான தோற்றத்தை வழங்குவதுதான். தடிமனான, அதிக கவரேஜ் கொண்ட ஃபவுண்டேஷனைத் தவிர்த்துவிட்டு, தேவையான இடங்களில் மட்டும் மெல்லிய அடுக்குகளாக மேக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கேமரா வெளிச்சம், ஸ்டுடியோ விளக்கு அல்லது சாதாரண பகல் வெளிச்சம் என எந்தச் சூழலிலும் முகம் அதிக எண்ணெய்ப் பளபளப்பின்றி சீராகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
இந்த மேக்கப்பிற்கு சருமத்தைத் தயார்படுத்துவது (Skin prep) மிகவும் முக்கியம். முகத்தில் அதிக எண்ணெய்ப்பசையோ அல்லது கனமான கிரீம்களோ இருந்தால் மேக்கப் நிலைக்காது. முகத்தை நன்கு சுத்தப்படுத்திய பின், சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை மட்டும் வழங்கக்கூடிய கனமற்ற (Light-weight) மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது இந்த லுக்கிற்கு சரியான அடித்தளமாக இருக்கும்.
அடுத்து சருமத் துளைகளை மென்மையாக்க நெற்றி, மூக்கு மற்றும் கன்னங்களில் (T-Zone) சருமத் துளைகள் அதிகமாகத் தெரிந்தால், அந்த இடங்களில் மட்டும் ‘போர்ஸ்-ஃபில்லிங் பிரைமரை’ (Pore-filling Primer) லேசாகப் பயன்படுத்தலாம். சிறிதளவு பிரைமரைத் தடவி சருமத்தின் மேற்பரப்பை சீராக்கினாலே, மென்மையான கேன்வாஸ் போன்ற அமைப்பு கிடைத்துவிடும்.
ஃபவுண்டேஷன்
பயன்படுத்தும் முறை
முழு முகத்திற்கும் ஃபவுண்டேஷனை ஒரே சீரான தடிமனான அடுக்காகப் பூசுவதற்குப் பதிலாக, முகத்தின் மையப்பகுதியில் (அதிக கவரேஜ் தேவைப்படும் இடம்) தொடங்கி வெளிப்புறமாக மெதுவாக தடவி சீராக்க வேண்டும். ஃபவுண்டேஷன் பிரஷ் அல்லது சற்றே ஈரமான மேக்கப் ஸ்பாஞ்ச் மூலம் சருமத்தில் லேசாக அழுத்தி இதைச் செய்யலாம். இங்கு குறைகளை முழுமையாக மறைப்பதை விட, சருமத்தின் இயல்பான அழகை மேம்படுத்துவதே பிரதானம்.
முழு மேட் வேண்டாம்...
வெல்வெட் ஸ்கின் என்பது மேட் மற்றும் டியூயி (Dewy) தோற்றங்களுக்கு இடைப்பட்ட ஒரு சமநிலை. கிரீம் அடிப்படையிலான மேக்கப் பொருட்களைப் பயன்படுத்திய பின், லேசான செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். முகத்தை பவுடர் போட்டு உயிரற்ற மேட் போல மாற்றிவிடாமல் இருக்க, நெற்றி, மூக்கு போன்ற தேவையான இடங்களில் மட்டும் சிறிதளவு ட்ரான்ஸ்லூசென்ட் பவுடரை (Translucent powder) தூவி செட் செய்தால் போதுமானது.
அனைவருக்கும் ஏற்ற அழகு
கிளாஸ் ஸ்கின் போன்ற தோற்றத்திற்கு தீவிரமான சருமப் பராமரிப்பும் பளபளப்பான சருமமும் தேவைப்படலாம். ஆனால் வெல்வெட் ஸ்கின், அனைத்து வயதினருக்கும் அனைத்து வகையான சரும அமைப்பிற்கும்
கச்சிதமாகப் பொருந்தும்.
“சருமம் அழகாக இருக்கிறதே தவிர, மேக்கப் அழகாக இருக்கிறது என்று தெரியக்கூடாது” என்பதே இந்த ட்ரெண்டின் தாரக மந்திரம். செயற்கையான
பளபளப்பைத் தவிர்த்து, இயற்கையான அதேசமயம் நேர்த்தியான மேக்கப் லுக்கை விரும்புபவர்களுக்கு இந்த வெல்வெட் ஸ்கின் லுக் மிகச்சிறந்த தேர்வு.
- எஸ். ஆர்த்தி


