Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழிச் சந்தை நடைபெறுவது வழக்கம். திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தைகளில் ஒன்றாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத் தொழிலுக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 8ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, இன்று அய்யலூரில் ஆட்டுச்சந்தை கூடியது.

இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் விற்பனை களைகட்டியது. அதிக அளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சந்தைக்குள் போதிய இடவசதி இல்லாததால், சந்தைக்கு வெளியே உள்ள சர்வீஸ் சாலையிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இன்றைய சந்தையில் 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு அதிகபட்சமாக ரூ.10,000 வரையிலும், செம்மறியாடு ரூ.9,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், சண்டைக்குப் பயன்படுத்தப்படும் கட்டுச்சேவல் அதிகபட்சமாக ரூ.15,000 வரையிலும் விற்பனையானது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வம் காட்டியதால், இன்று ஒரே நாளில் மட்டும் அய்யலூர் சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடு மற்றும் கோழிகளுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.