வைரல் டாக்டர்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார், மருத்துவர் சங்கர் ராம்சந்தானி. ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் சங்கர், பர்லா எனும் இடத்தில் ஒரு கிளினிக்கையும் நடத்தி வருகிறார். ஏழை, எளியவர்களுக்காக மருத்துவச் சேவையை வழங்குவதற்காக இந்த கிளினிக்கை ஆரம்பித்தார் சங்கர். ஆம்; இங்கு மருத்துவக் கட்டணம் வெறும் ஒரு ரூபாய்தான். மருந்துகளின் விலையும் குறைவு. இதுவரை இந்தக் கிளினிக்கில் 70 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். இதுபோக நோயாளிகளை கிளினிக்கிற்கு அழைத்து வருவதற்கு தனது சொந்தக் காரையே பயன்படுத்துகிறார் சங்கர்.
காருக்கு இறுதிச்சடங்கு
பொதுவாக மனிதர்கள் இறந்த பிறகு இறுதிச்சடங்குகளைச் செய்வது வழக்கம். ஆனால், குஜராத்தில் சஞ்சய் என்பவர், தனது காருக்கு இறுதிச்சடங்கு செய்து, வைரலாகி இருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பு வேகன் ஆர் காரை வாங்கினார் சஞ்சய். அவரது குடும்பத்தில் ஓர் உறுப்பினர் போலவே ஆகிவிட்டது அந்தக் கார். அந்தக் கார் பழையதாகிவிட்டது. யாருக்காவது விற்கக்கூடிய நிலையில் அந்தக் கார் இருந்தது. ஆனால், காரை விற்கும் மனநிலையில் சஞ்சய் இல்லை. குடும்ப உறுப்பினர் போல காரை கருதியதால், காருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்தார். இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. சுமார் 1500 பேர் வருகை தர, காரை அலங்கரித்து, புதைத்திருக்கிறார் சஞ்சய். புதைத்த இடத்தில் ஒரு செடியையும் நட்டு வைத்திருக்கிறார். இந்த இறுதிச் சடங்கிற்கான செலவு, 4 லட்ச ரூபாய்.
புரட்சிப் பெண்
இந்தியாவில் தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. வருடத்துக்கு சுமார் 16 லட்ச குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. சட்ட ரீதியாகவே இந்தியாவில் குழந்தை திருமணத்துக்கு தடை இருக்கிறது. இருந்தாலும் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. இத்தகைய சூழலில் குழந்தை திருமண ஒழிப்புக்காக தொடர்ந்து போராடி வருகிறார், பீகாரைச் சேர்ந்த ரோஸ்னி பர்வீன். இவரும் குழந்தை திருமணத்துக்குப் பலிகடாவாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிமல்வரி, பகல்வரி, மகேஷ்பட்னா,திகல்பேங்க் என பல கிராமங்களுக்குச் சென்று குழந்தை திருமணத்தில் உள்ள ஆபத்துகளை விளக்கிச் சொல்லியதோடு, பதின்பருவத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை உருவாக்கினார். இந்தக் குழு இதுவரைக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. சமீபத்தில் ரோஸ்னியின் சேவையைப் பாராட்டி, ஐ நா சபையும் கௌரவித்திருக்கிறது.
உலகின் அதிக வயதான அழகி
கடந்த உலக அழகிப்போட்டி வரைக்கும் 18 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பது விதி. சமீபத்தில் இந்த விதியை மாற்றியமைத்திருக்கிறது உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு. ஆம்; 18 வயது நிரம்பிய எந்தப் பெண்ணும் போட்டியில் பங்கு பெறலாம். உச்ச வயது வரம்பு இல்லை என்பதே அந்த புது விதி. இப்படியான விதியை அறிவித்த உடனே உலக அழகிப் போட்டிக்குத் தயாராக ஆரம்பித்துவிட்டார் , தென்கொரியாவைச் சேர்ந்த சோய் சூன் ஹ்வா.
தென்கொரியாவிலிருந்து ஒரு பெண்தான் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதற்காக தகுதிச் சுற்று போல ஒரு போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் சோயும் கலந்துகொள்ள , உலக அளவில் பிரபலமானார். சோயுடன் போட்டியிட்ட மற்ற பெண்களுக்கு அவரது பேத்தியின் வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்; சோயிக்கு வயது 81. இந்தப் போட்டியில் அவர் தேர்வாகவில்லை. ஆனாலும் உலக அழகிப் போட்டியில் பங்குபெறுவதற்காக தேர்வான தென்கொரியாவின் இளம் பெண்ணைவிட, சோயிக்கு வாழ்த்துகளும், மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
ஆறாவது திருமண நாள்
ஆறு வருடங்களுக்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த அகிகிகோ என்பவர் மிகு எனும் கார்ட்டூன் கேரக்டரை விர்ச்சுவலாகத் திருமணம் செய்தார். உலகிலேயே முதல் முறையாக கார்ட்டூன் கேரக்டரை ஒருவர் திருமணம் செய்வது இதுவே முதல் முறை. சமீபத்தில் ஆறாவது திருமண நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார் அகிகிகோ. “இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு இடையே நடக்கும் திருமணங்களே ஆறு வருடங்கள் தாக்குப் பிடிப்பது கஷ்டம். ஒரு கார்ட்டூன் கேரக்டருடனான கல்யாணம் இவ்வளவு வருடங்கள் தொடர்வது ஆச்சர்யம்” என்று நெட்டிசன்கள் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.
தொகுப்பு: த.சக்திவேல்