நன்றி குங்குமம் தோழி
முதல் இயக்குனர்
இந்தியாவைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ என்ற படம் பல சர்வதேச விருதுகளைத் தட்டி வருகிறது. முக்கியமாக சிறந்த வெளிநாட்டுப் படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான ‘கோல்டன் குளோப்’ விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய இயக்குனர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியிருக்கிறார் பாயல்.
சாதனை பாட்டி
உலகில் உள்ள ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த அதிக வயதானவர் என்ற சாதனையை தன்வசமாக்கியிருக்கிறார், டொரோத்தி ஸ்மித். இவரது வயது 102. அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர், டொரோத்தி. இளம் வயதிலேயே ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, அண்டார்டிகா என ஆறு கண்டங்களுக்கும் பயணம் செய்து, அங்குள்ள இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டார். ஆனால், ஏழாவது கண்டமான ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
காலங்கள் வேகமாக ஓடியது. டொரோத்திக்கு வயதானது. ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவை அப்படியே மூட்டை கட்டிவிட்டு, முதியோர் இல்லத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார் டொரோத்தி. ‘யெஸ் தியரி’ என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த அம்மர் மற்றும் ஸ்டாஃபான் என்ற இரு இளைஞர்களின் உதவியால் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து சாதனை படைத்திருக்கிறார் இந்தப் பாட்டி. இதற்கு முன்பு 94 வயதான ஒருவர், ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
வரலாறு படைத்தார் டெய்லர்
உலகம் முழுவதும் பிரபலமான ஒரு பாடகி, டெய்லர் ஸ்விஃப்ட். அவரது ‘த எராஸ் டூர்’ என்ற இசைக் கச்சேரி சுற்றுலாவைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். மார்ச் 17, 2023ல் அமெரிக்காவில் உள்ள கிளண்டேலில் ஆரம்பித்த ‘த எராஸ் டூர்’, டிசம்பர் 8, 2024ல் கனடாவில் உள்ள வான்கூவரில் முடிந்தது. ‘எராஸ் டூரி’ல் நடந்த 149 இசைக் கச்சேரிகளில் 1.10 கோடி டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன என்பதுதான் இதில் ஹைலைட். இந்த டிக்கெட் விற்பனை மூலமாக 2.077 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார் டெய்லர்.
அதாவது, இந்திய மதிப்பில் 17629.03 கோடி ரூபாய். இதுவரை எந்த ஒரு இசைக் கச்சேரி சுற்றுலாவும் இவ்வளவு தொகையை ஈட்டியதில்லை என்பது வரலாற்றுச் சாதனை. இத்தனைக்கும் உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா மற்றும் சீனாவில் கச்சேரி நடக்கவில்லை.
ஜப்பான் விநோதம்
‘‘வீ ட்டுக்குள் யாரோ புகுந்துவிட்டனர்…’’ என்று ஜப்பானில் தினமும் ஒரு புகாராவது வந்துவிடும். ஆனால், வீட்டை உடைப்பது யாரென்று காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் டசாய்ப்பூ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள், மதியம் ஒரு மணி அளவில் அந்த மர்ம நபர் புகுந்துவிட்டார். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர்.
அவர்கள் ரகசியமாக காவல்துறையிடம் சொல்ல, உடனே அந்த வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரைப் பிடித்துவிட்டனர். ‘‘இப்படி மற்றவர்களின் வீட்டை உடைத்து உள்ளே செல்வது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இந்நிகழ்வு என்னுடைய மன அழுத்தத்திலிருந்து விடுதலையளிக்கிறது’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் அந்த மர்ம நபர்.
தனிமையே மகிழ்ச்சி
சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழகம் சிங்கிளாக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் சிங்கிளாக இருக்கும் ஆண்களைவிட, சிங்கிளாக இருக்கும் பெண்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். தங்களின் விருப்பம் போல வாழ முடிகிறது என்றும் சிங்கிள் பெண்கள் தெரிவித்துள்ளனர். திருமணம், காதல் போன்றவை தங்களின் வாழ்க்கையை குறுக்கி விடுகிறது என்றும் சொல்லியிருக்கின்றனர்.
பயணம், வேலை, விருப்பமான செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அதிக நேரம் கிடைப்பதாகவும் சிங்கிள் பெண்கள் தெரிவித்திருக்கின்றனர். திருமணமான பிறகு தங்களுக்கான நேரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி என்றும் அவர்கள் வருத்தத்துடன் சொல்லியிருப்பது இதில் ஹைலைட்.
தொகுப்பு: த.சக்திவேல்