லண்டன்: கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளை மேலும் செம்மைப் டுத்தும் நோக்கில் பல்வேறு விதிகளை ஐசிசி உருவாக்கி நேற்று அறிவித்துள்ளது. புதிய விதிகள், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் தொடராக, இலங்கை – வங்கதேசம் இடையில், இலங்கையின் காலே நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய விதிப்படி, இரு பேட்ஸ்மேன்கள் ரன்னுக்காக ஓடும்போது, கோட்டை தொடாமல் ஓடுவது தவறு.
அதற்கு தண்டனையாக அவர்கள் சார்ந்த அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் குறைக்கப்படும். மேலும், இரு பேட்ஸ்மேன்களில் அடுத்த பந்தை எதிர்கொள்ளும் வீரர் யார் என்பதை, பந்து போடும் அணி முடிவு செய்யும். புதிய விதிப்படி, ஒரு ஓவர் வீசப்பட்ட பின், அடுத்த ஓவரின் முதல் பந்து, 60 நொடிகளுக்குள் வீசப்பட வேண்டும்.
அதற்காக, விளையாட்டு மைதானத்தில் பூஜ்யம் முதல் 60 நொடிகள் வரை ஓடும் வகையில் டிஜிட்டல் கடிகாரம் வைக்கப்படும். இதை மீறினால், பந்து வீசும் அணிக்கு இரு முறை எச்சரிக்கை விடுக்கப்படும். 3வது முறை மீறினால், பந்து வீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். பந்து வீச்சாளர் பந்தை எச்சில் படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதற்காக பந்தை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அந்த தவறுக்கு தண்டனையாக பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். பீல்டிங்கின்போது பிடிக்கப்பட்ட கேட்ச் உறுதியாக இல்லாமல், கேட்ச் செய்ததாக அப்பீல் செய்தால், அதற்கு தண்டனையாக ‘நோ பால்’ வழங்கப்படும்.