சென்னை: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவூர் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் அரசு பேருந்து நிலைய பணிமனை திறப்பு விழா மற்றும் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளை இயக்கும் விழா கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று கோவூரில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு, பேருந்து நிலைய பணிமனையை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து புதிய வழித்தடங்களில் புதிய அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், ‘‘மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். இந்தியாவே நமது முதல்வரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த திட்டத்தை தொடங்கலாம் என்று பார்த்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் விடியல் பயணம் கொண்டு வந்ததுபோல், இந்த திட்டத்திற்கும் விடியல் வந்துள்ளது. தற்போது, ரூ.2,800 கோடியை போக்குவரத்து துறைக்கு முதல்வர் வழங்கியுள்ளார். 68% மகளிர் தினமும் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து துறை சிரமத்தில் இருந்து சற்று மேலே வந்து செயல்பட தொடங்கியுள்ளது,’’ என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘குன்றத்தூரில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகள் நிறைந்து வருவதால், கோவூரில் இருப்பவர்கள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. கோவூர்காரர்களும் பேருந்தில் அமர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக, இங்கு பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து இயக்கப்பட்டது,’’ என்றார். நிகழ்ச்சியில் காஞ் சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்டிசி மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை. மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.