சென்னை: ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தட்கல் டிக்கெட்களுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட புதிய நடைமுறையும் அமலுக்கு வருகிறது. வருவாயை அதிகரிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றிய பாஜ அரசு வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வரி விதிப்பு, பிரீமியம் கட்டணம் என பல்வேறு வகையில் வருவாயை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அதே ஆண்டு ஜூன் மாதத்தில் ரயில் கட்டணம் மற்றும் சரக்குப் போக்குவரத்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. ரயில் கட்டணங்கள் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுபோல் ரயில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் 6.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டது. நேரடியாக மட்டுமின்றி பிரீமியம் கட்டண ரயில் சேவைகளை அறிமுகம் செய்தும், மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டது. சில பகுதிகளில் கொரோனா பரவலுக்குப் பிறகு பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டது மறைமுக கட்டண உயர்வுக்கு வழி வகுத்தது.
இந்த நிலையில், தற்போது ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின. இதற்கு நாடு முழுக்க பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருந்தும், ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என, ரயில்வே இணையமைச்சர் சோமன்னா சில தினங்கள் முன்பு அறிவித்தார். இதற்கேற்ப கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் சாதாரண 2ம் வகுப்பில் பணிக்க 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. 500 கிலோ மீட்டருக்கு மேல் 2ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு அரை காசு உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண வகுப்பில் பயணிக்க கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு காசு எனவும், அனைத்து ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 காசு எனவும் உயர்த்தப் பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு முதன்முறையாக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. மற்றபடி புறநகர் ரயில் டிக்கெட்கள், சீசன் டிக்கெட்டுகள் உயர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்கச் செலவு அதிகரிப்பு மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத், கதிமான், அம்ரித் பாரத், மற்றும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களுக்கு பொருந்தும். இந்த உயர்வு பயணிகளுக்கு, குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு பல்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஹம்சாபர் ரயில்களின் ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் அம்ரித் பாரத் ரயில்களின் பொது வகுப்பு குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பும் நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்கிறது. ஏசி வகுப்பு பயணிகளுக்கு, வந்தே பாரத், சதாப்தி மற்றும் தேஜஸ் ரயில்களில் பயணிக்க ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்கிறது. மேலும் டைனமிக் கட்டண முறை மற்றும் ஜிஎஸ்டி, முன்பதிவு கட்டணத்துடன் சேரும்போது டிக்கெட் கட்டணம் மேலும் அதிகரிக்கும். வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயில்கள் வணிகர்கள், சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. புதிய கட்டண உயர்வின்படி சென்னை – திருவனந்தபுரம் (900 கி.மீ) போன்ற நீண்ட தூர பயணங்களில், ஏசி வகுப்புகளில் ரூ.18 உயர்வு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் ரூ.9 உயர்வு ஏற்படும்.
இதுபோல், உதாரணமாக, புதிய கட்டண விகிதப்படி ஏசி சேர் கார், எக்ஸ்கியூடிவ் வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசு வீதம் கட்டணம் அதிகரிக்கும். உதாரணமாக, சென்னை – கோயம்புத்தூர் இடையே தற்போதைய கட்டணமாக சுமார் ரூ.10 அதிகரித்து ரூ.1,410 ஆக இருக்கும்.
வந்தே பாரத், சதாப்தி மற்றும் தேஜஸ் ரயில்களில் டைனமிக் கட்டண முறை உள்ளது. இருக்கைகளின் தேவை அதிகரிக்கும்போது, கட்டண உயர்வு மேலும் அதிகரிக்கலாம். இது பயணிகளுக்கு கணிக்க முடியாத செலவை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல், ஐஆர்சிடிசி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம், முதல் 30 நிமிடங்களுக்கு முகவர்கள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது போன்ற நடைமுறைகளும் இன்று அமலுக்கு வந்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பலரும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் பெறுபவர்களுக்கு இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு டிக்கெட் வழங்கப்படுகிறது.