சென்னை: பகுஜன்சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. செங்குன்றம் அருகே பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் நேற்று காலை நினைவேந்தல் சங்கமமாக தென்னிந்திய புத்த விஹார் தலைவரும் அவரது மனைவியுமான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடந்தது.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளை முன்னிட்டு பொத்தூர், வள்ளலார் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் உள்ள நினைவிடத்தில் அமைதி ஊர்வலம் நிறைவு பெற்றது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயின் தாயார் கமலா கவாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் புத்த வந்தனம் செய்தனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவேந்தல் மலர் வெளியிடப்பட்டது.
காலை 11 மணியளவில் 9 அடி உயரத்தில் வெள்ளைபளிங்கு கற்களால் ஆன ஆம்ஸ்ட்ராங்கின் முழு உருவ சிலையை அவரது துணைவியார் பொற்கொடி, மகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயார் கமலா கவாய் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் தமிழ்நாடு உணவு கிடங்கு பாதுகாப்பு வாரிய தலைவர் ப.ரங்கநாதன், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா, தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் மோகனகிருஷ்ணன், தேவேந்திர குல வேளாளர் மக்கள் இயக்கத் தலைவர் குமுளி ராஜ்குமார் பாண்டியன் உள்பட பலர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் மற்றும் உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, நேற்று மாலை 3 மணியளவில் மாணவர் அரங்கம் மற்றும் கருத்தரங்கம் என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் புத்த பிக்குகள், தேசிய, மாநில அரசியல் கட்சி தலைவர்கள், தென்னிந்திய பௌத்த சங்கங்கள், பாபா சாகிப் அம்பேத்கர் அமைப்புகள், சமூக தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்பட பலர் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சியை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கினார். அவருக்கு பல கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.