புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கப்பட்டன. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், நேற்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி அமைந்துள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கியது. மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நேற்று பிற்பகல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள், அனைத்து கட்சி எம்பிக்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நடந்து சென்றார்கள். அப்போது பிரதமர் மோடி அரசியல்சாசன புத்தகத்தை கையில் எடுத்துச்சென்றார்.
அதே போல் அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை வைத்துக்கொண்டு, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு நடந்து சென்றார்கள். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ஒன்றாக நடந்து சென்றனர். அங்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவையில் முதல் நாள் நடவடிக்கையை தொடங்கிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்ற விவாதத்தின் தரத்தை உயர்த்துமாறும் வேண்டுகோள் வைத்தார். மேலும் தேசத்தை கட்டியெழுப்பிய தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பை வழங்கிய தலைவர்களுக்கும் ஓம்பிர்லா தனது அஞ்சலியை செலுத்தினார்.
* குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்ட எம்பிக்கள்
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செல்லும் முன்பு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பழைய நாடாளுமன்றம் முன்பு குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முதலில் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுப்புகைப்படமும், அதை தொடர்ந்து 17வது மக்களவை உறுப்பினர்களின் புகைப்படமும் எடுக்கப்பட்டது. முதல் வரிசையில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச் டி தேவகவுடா ஆகியோர் அமர்ந்திருந்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, சரத்பவார், பரூக் அப்துல்லா, ஒன்றிய அமைச்சர்கள், பாஜ தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மக்களவை, மாநிலங்களவை செயலர்கள் இடம் பெற்று இருந்தனர். அதனை தொடர்ந்து அனைத்துகட்சி எம்பிக்களும் வரிசையாக இடம் பெற்று இருந்தனர்.
புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அம்சங்கள்
* புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையின் நிறம் கோகம் சிவப்பு நிறத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மக்களவை மயில் இறகு நீலம் அடிப்படையில் கத்தாழை பச்சை நிறத்தை மையமாக கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது.
* வேத காலம் முதல் இன்று வரையிலான இந்தியாவின் ஜனநாயக மரபுகளை விவரிக்கும் கலைப்படைப்பைக் கொண்டுள்ளது.
* மகாத்மா காந்தி, சாணக்கியர், கார்கி, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் பிரமாண்ட பித்தளை உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
* கோனார்க்கில் உள்ள சூரியன் கோயிலின் தேர் சக்கரம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் மூன்று மண்டபங்கள் உள்ளன.
* இந்தியாவின் நடனம், பாடல் மற்றும் இசை மரபுகளை வெளிப்படுத்தும் சங்கீத் கேலரி, நாட்டின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை சித்தரிக்கும் ஸ்தாப்த்யா கேலரி மற்றும் பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பாரம்பரியங்களைக் காட்டுப்படுத்தும் கேலரி உள்ளன.
* நான்கு மாடிகளைக் கொண்ட பாராளுமன்றக் கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இரண்டு அவைகளை கொண்டுள்ளது.
* 888 இருக்கைகள் கொண்ட வகையில் மக்களவை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் இட வசதி உள்ளது. மாநிலங்களவையில் 384 இருக்கைகள் உள்ளன.
* புதிய கட்டிடத்தில் ஆறு புதிய கமிட்டி அறைகள் மற்றும் 92 அறைகள் அமைச்சர்களுக்கான அலுவலகங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
* புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஆறு நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் உள்ளன. இவை அனைத்தும் பண்டைய சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* 6 வாயில்களின் வடிவமைப்பு
கர்நாடகாவின் பனவாசியில் உள்ள மதுகேஸ்வரா கோயிலில் உள்ள சிலைகளின் வடிவமைப்பில் கஜ் வாயிலில் இரண்டு கல் யானை சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அவை 9ம் நூற்றாண்டு வகையை சேர்ந்தவை. அதே நேரத்தில் அஸ்வ வாயிலில் உள்ள இரண்டு குதிரை சிலைகள் ஒடிசாவில் உள்ள 13ம் நூற்றாண்டின் சூரிய கோயிலில் உள்ள சிற்பங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷர்துலா, ஹம்சா மற்றும் மகரா ஆகிய மூன்று வாயில்களில் உள்ள சிலைகள் குவாலியரில் உள்ள குஜ்ரி மஹால், ஹம்பியில் உள்ள விஜய் வித்தலா கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஹொய்சலேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் உள்ள சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருட வாயிலில் விஷ்ணுவின் மலை (வாகனம்) சிலைகள் உள்ளன. இது 18ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தின் தமிழ்நாட்டின் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
* பழைய கட்டிடத்தின் பெயர் ‘அரசியலமைப்பு சபை’
பழைய பாராளுமன்ற கட்டிடம் இனிமேல் அரசியலமைப்பு சபை(சம்விதான் சதன்) என்று அழைக்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை, ‘அரசியலமைப்பு சபை’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, பரிந்துரை செய்தார். அவர் கூறுகையில்,’நாங்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாறுகிறோம். இது ஒரு நல்ல நாள். இன்று விநாயக சதுர்த்தி. புதிய கட்டிடத்திற்கு செல்வதால், இந்த கட்டிடத்தின் பெருமை ஒருபோதும் குறையக்கூடாது என்பதே எனது ஆலோசனை. இதை பழைய நாடாளுமன்றம் என்று மட்டும் அழைக்கக்கூடாது. இதற்கு அரசியலமைப்பு சபை என்று பெயரிடலாம்’ என்று மோடி கூறினார். அதை ஏற்று சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு வெளியிட்டார்.
* 1927 முதல் இந்தியாவின் சாட்சியாக திகழ்ந்த பழைய நாடாளுமன்றம்
1921ம் ஆண்டில் கன்னாட் பிரபு இளவரசர் ஆர்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதை தொடர்ந்து கட்டிட பணிகள் நடந்து 1927 ஜனவரி 18ல் திறக்கப்பட்டது. 1927ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி நடைபெற்ற மூன்றாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் வைஸ்ராய் லார்ட் இர்வின், ‘டெல்லியில் உள்ள உங்கள் புதிய மற்றும் நிரந்தர இல்லத்தில் இன்று நீங்கள் முதன்முறையாகச் சந்திக்கிறீர்கள்’ என்று கூறினார். பண்டிட் மதன் மோகன் மாளவியா, முஹம்மது அலி ஜின்னா, பண்டிட் மோதிலால் நேரு, லாலா லஜபதிராய், சி எஸ் ரங்கா ஐயர், மாதியோ ஸ்ரீஹரி அனே, வித்தல்பாய் படேல் உள்ளிட்டோர் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.
சுதந்திரத்தை முன்னிட்டு, அரசியல் நிர்ணய சபை ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் இரவு 11 மணிக்கு கூடியது. சிறப்பு அமர்வின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர் சுசேதா கிரிப்லானி, வந்தே மாதரத்தின் முதல் வசனத்தைப் பாடினார். பிரதமர் நேரு தனது புகழ்பெற்ற ‘டிரிஸ்ட் வித் டெஸ்டினி’ உரையை நிகழ்த்தினார். 1948ல் பிப்ரவரி 2 அன்று மக்களவைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் மரணத்தை சபாநாயகர் ஜி வி மவ்லாங்கர் அறிவித்தார்.
1965ல் இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவிய போது பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டபோது, ஒவ்வொரு வாரமும் ஒரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்ததும் இதே சபையில் இருந்துதான். 1975ம் ஆண்டு அவசரகாலச் சட்டத்திற்குப் பிறகு மக்களவை கூடியபோது, சபையில் பிரச்சினைகளை எழுப்ப தனிப்பட்ட உறுப்பினர்களின் உரிமைகளை ரத்து செய்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவை 1975 ஜூலை 21 அன்று கூடியபோது ஜனாதிபதியின் அவசரநிலைப் பிரகடனத்தை உள்துறை துணை அமைச்சர் எப்.எச்.மொஹ்சின் வெளியிட்டார்.
அப்போது மக்களவை உறுப்பினர்களான சோம்நாத் சாட்டர்ஜி, இந்திரஜித் குப்தா, ஜகன்னாத்ராவ் ஜோஷி, எச்என் முகர்ஜி, பிகே டியோ ஆகியோர் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.1989ல் கூட்டணி அரசு பதவிக்காலம் தொடங்கியது. 1998ம் ஆண்டு வரை இதனால் அடிக்கடி அரசுகள் மாறின. 1999 ஏப்ரல் 17ல் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த வாஜ்பாய் அரசு ஒரு வருடத்திற்குள் நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1974ம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தி ஜூலை 22 அன்று பாராளுமன்றத்தில் பொக்ரானில் நடந்த அணுகுண்டு சோதனை குறித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார். ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப் பிறகு 1998ல், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மே 11 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில் விஞ்ஞானிகள் நடத்திய அணுசக்தி சோதனைகளை அறிவித்து இந்தியாவை அணு ஆயுத நாடாக அறிவித்தார். 2008ல், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பிரதமர் மன்மோகன் சிங் தனது கூட்டணி அரசை வலுப்படுத்தினார்.
* மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 848 ஆகிறதா?
நாடாளுமன்ற மக்களவையின் பலம் 550க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு சட்ட விதி. கடந்த 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மோடி அரசு மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால்தான் தற்போது புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை அரங்கில் 888 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக அதிகரிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
தற்போது, மகளிர் இடஒதுக்கீடு , மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் படி தொகுதிகளை மறுவரையறை செய்த பிறகுதான் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்படி ஒரு முயற்சியில் மோடி அரசு இறங்கினால், குடும்ப கட்டுப்பாடு திட்டம வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதால் மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக உள்ள தென் மாநிலங்களில் குறைவான எம்.பி.க்கள் மட்டுமே இருக்கும் நிலை உருவாகும். இதனால், அந்த திட்டத்தை தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.