இந்தூர்: மலைப்பகுதியில் வாடகை பைக் மீட்கப்பட்ட நிலையில், தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி மாயமானதால் மத்தியபிரதேசம் மற்றும் மேகாலயா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி, கடந்த 23ம் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர்.
கடந்த 24ம் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தகவலறிந்த மேகாலயா காவல்துறையும் உள்ளூர் மக்களும் இணைந்து, கடந்த 25ம் தேதி முதல் தீவிர தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமாரை இந்த வழக்கை விசாரிக்க மேகாலயா விரைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் உதவி செய்கின்றனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது என்பதால், இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.