சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் தீவிர மழை பெய்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா- மேற்கு வங்கம் கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. 28ம் தேதியிலும் மேற்கண்ட இடங்களில் இடிமின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 29ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி இருக்கும்.