புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021ல் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில் தனியாருக்கு மதுபான கடைகள் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக அம்மாநில ஆளுநர் சக்சேனா குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன. இதனால் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் பல்வேறு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். தற்போது வரையிலும் அவருக்கு ஜாமீன் தரப்படவில்லை. இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் ெகஜ்ரிவாலிடமும் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எம்பி சஞ்சய் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதான தினேஷ் அரோரா அப்ரூவராக மாறி உள்ளார். இவர் சஞ்சய் சிங் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர் என அமலாக்கத்துறை கூறி உள்ளது. தினேஷ் அரோரா மூலமாக கட்சி நிதியாக பல கோடிகளை பெற்று, அதற்கு பதிலாக மதுபான கொள்கையில் சில தொழிலதிபர்களுக்கு சாதகமான மாற்றங்களை சிசோடியா செய்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும், எம்பி சஞ்சய் சிங் மூலமாக தினேஷ் அரோரா, முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று 10 மணி நேரம் சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்றிரவு சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிசோடியாவுக்கு பிறகு கைதாகும் 2வது முக்கிய ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆவார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஆத்மி – பாஜ இடையேயான மோதலை தீவிரமாக்கி உள்ளது. சஞ்சய் சிங் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கப்படுவார் என தெரிகிறது. இதற்கிடையே, எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தன்னை கட்டாயப்படுத்தி அமலாக்கத்துறை கைது செய்ததாக, சஞ்சய் சிங் கைதாவதற்கு முன்பாக எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
* பிரதமர் மோடியின் பதற்றம் தெரிகிறது
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘சஞ்சய் சிங்கை கைது நடவடிக்கை முற்றிலும் சட்ட விரோதமானது. இது பிரதமர் மோடியின் பதற்றத்தை காட்டுகிறது. இனி தேர்தல் வரையிலும் இன்னும் பல எதிர்க்கட்சி தலைவர்களை அவர்கள் கைது செய்வார்கள். நேற்று பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இன்று சஞ்சய் சிங் வீட்டில், நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடத்தப்படலாம். 2024 மக்களவை தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என தெரிந்ததால் பாஜவின் அவநம்பிக்கையான முயற்சிகள் இவை. ஒரு வருடமாக மதுபான ஊழல், ஊழல் என்கிறார்கள். ஆனால் இதுவரை எங்கேயும் எதுவும் மீட்கப்படவில்லை. சஞ்சய் வீட்டிலும் எதும் கிடைக்கவில்லை’’ என்றார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
* அடுத்தது கெஜ்ரிவால்
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா அளித்த பேட்டியில், ‘‘சஞ்சய் சிங் முன்னிலையில் தினேஷ் அரோரா முதல்வர் கெஜ்ரிவாலிடம் கட்சி நிதிக்கான காசோலை கொடுத்ததாக விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் பலமுறை மணிஷ் சிசோடியாவை சந்தித்துள்ளார். மதுபான ஊழலின் முதல் குற்றவாளி கெஜ்ரிவால்தான். அவரது வலது கை சிசோடியா சிறையில் உள்ளார். இடது கையான சஞ்சய் சிங் மீது ரெய்டு நடக்கிறது. தனது அமைச்சர்களையும், எம்பிக்களையும் ஊழல் செய்ய வற்புறுத்தும் கெஜ்ரிவால் கைக்கு விலங்கு மாட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை’’ என்றார்.