கோவை: கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையை உக்கடத்தில் இருந்து பாலக்காடு செல்பவர்கள், போத்தனூர், சுந்தராபுரம், மதுக்கரை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் நபர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, சிறுவாணி, பேரூர், பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகன போக்குவரத்து கோவை நகருக்குள் உள்ள ஒப்பணக்கார வீதி செல்வதற்கு உக்கடம் பகுதியை கடந்து செல்ல வேண்டும். இதனால் உக்கடம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த 2010ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மூலம் கருத்துரு உருவாக்கப்பட்டது. பின்னர், 2011ல் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றத்திற்கு பின் திட்டம் செயல்படுத்தாமல் இருந்த நிலையில், கடந்த 2018ல் பாலப்பணிகள் துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது. மிக மந்தமாக வேலைகள் நடந்து வந்தது. 12 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு, ஒப்பணக்கார வீதி வரை உயர்வு மேம்பாலம் கட்டுமான பணிகள் வேகமெடுத்தது. மொத்தம் ரூ.481 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் 125 தூண்கள் கொண்ட 4 வழி செல்லக்கூடிய 3.80 கி.மீ. தூரமுள்ள மேம்பாலமாகும். உக்கடம் ஏறு தளம் 150 மீட்டர் நீளம், 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு ஏறு தளம் 162 மீட்டர் நீளம், 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளம், 7.58 மீட்டர் உயரத்திலும், பொள்ளாச்சி ரோடு இறங்கு தளம் 140 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டது. சுங்கம், வாலாங்குளம் ஏறு, இறங்கு தளம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏறுதளம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலைக்கும், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஏறுதளம் வழியாக உக்கடம், செல்வபுரம் மற்றும் ஒப்பணக்கார வீதிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையடுத்து, தற்போது மேம்பாலத்தினை அதிகளவிலான வாகனங்கள் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதன் காரணமாக உக்கடம்-ஆத்துப்பாலம் பகுதியில் பல வருடங்களாக இருந்த போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துள்ளது. அதாவது, மேம்பாலம் கட்டுமான பணியின்போதும், அதற்கு முன்பும் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு கார், பேருந்து, டூவீலர்கள் வருவதற்கு 20 நிமிடங்கள் வரை தேவைப்பட்டது.
இதனால், அந்த சாலையை தினமும் பயன்படுத்தி வந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். சரியான நேரத்திற்கு அவர்களால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் இருந்து வந்தது. ஆனால், புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளதால், உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி சாலையை அடைய 4 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதேபோல் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வருவதற்கும் 4 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம், கரும்புக்கடைக்கு பீக் ஹவர்களில் செல்வதற்கு 20 நிமிடங்கள் வரை தேவைப்பட்டது. ஆனால், புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த நேரம் 4 நிமிடமாக குறைந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், இந்த பாலத்தில் வேகமாக செல்ல முடியாது. வேகமாக சென்றால் நிச்சயம் விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
பாலம் சிறியதாகவும், நிறைய வளைவுகளையும் கொண்டிருக்கிறது. எனவே, கவனமுடன் பயணிக்க வேண்டும். 30 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் சென்றாலே 4 நிமிடத்தில் பாலத்தை கடக்க முடிகிறது. மேலும், சிலர் பாலத்தில் ஒரு வழிபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை போலீசார் கண்டறிந்து தடுக்க வேண்டும். இதுபோல் அவினாசி மேம்பாலம் பணிகளையும் விரைந்து முடித்தால், போக்குவரத்து நெரிசல் இல்லாத கோவையை பார்க்க முடியும்’‘ என்றனர்.