சென்னை: தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்துக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களை அமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும். 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களும், வட்டங்களும் அமைக்கப்படவில்லை என்றால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையான முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அவற்றை செய்ய முடியாது. அதன்படி, நடப்பு புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு இது தான் கடைசி வாய்ப்பு ஆகும். பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அரசின் சேவைகளை பெற நீண்ட தூரம் அலைய வேண்டியிருக்கிறது.
அதற்கு முடிவு கட்ட பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அமைப்பது மட்டும் தான் தீர்வு. எனவே, வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும்; அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.