புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகளை மாற்றி கட்சித்தலைவர் கார்கே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாக அமைப்பில் புதிய செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சில மாநிலங்களின் நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் கார்கே மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள பிரணவ் ஜா மற்றும் கவுரவ் பாண்டி ஆகியோர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்புத் துறை செயலாளராக உள்ள வினீத் புனியா, ருசிரா சதுர்வேதியும் அந்தத் துறையில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏக்கள் டேனிஷ் அப்ரார், டெல்லி மாநிலத்திற்கான செயலாளராகவும், திவ்யா மதேர்னா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் நெட்டா டிசோசா, முன்னாள் என்எஸ்யுஐ தலைவர் நீரஜ் குந்தன் மற்றும் நவீன் சர்மா ஆகியோர் வேணுகோபாலுடன் இணைந்து செயலாளர்களாக பணியாற்றுவார்கள். மனோஜ் தியாகி மற்றும் சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் நிர்வாக இணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உபி மாநில காங்கிரஸ் செயலாளர்களாக தீரஜ் குர்ஜார், பிரதீப் நர்வால், ராஜேஷ் திவாரி, தௌகிர் ஆலம், நிலான்ஷி சதுர்வேதி, சத்யநாராயண் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவும் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில அமைச்சராக இருந்த தீபிகா பாண்டே சிங், செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் மாநில செயலாளராக இருந்த மாநிலங்களை எம்பி ரஞ்சித் ரஞ்சனும் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் எம்எல்ஏ காசி நிஜாமுதீன், ராஜஸ்தான் இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகாராஷ்டிரா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு பொறுப்பாளர் சுரஜ் ஹெக்டே
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பு செயலாளராக சுரஜ் ஹெக்டேவை நியமனம் செய்து அக்கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோன்று ஆந்திரா மாநில செயலாளராக கணேஷ்குமார் யாதவ், இணை செயலாளராக பாலக் வர்மாவும், கர்நாடகா செயலாளராக ரோஜி எம் ஜான், மயூரா எஸ் ஜெயக்குமார், அபிஷேக் தத், பி. கோபியும், கேரளா, லட்சத்தீவு செயலாளராக பி.வி.மோகன், வி.கே. அறிவழகன், மன்சூர்அலிகான் ஆகியோரும், தெலங்கானா செயலாளர்களாக பி.சி. விஷ்ணுநாத், பி.விஸ்வநாதன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.