சென்னை: பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சென்னையில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை ஆவின் நிர்வாகம் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மாதாவரம் மற்றும் அச்சரப்பாக்கத்தை தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) திகழ்கிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலமாக சுகாதாரமான முறையில் பால் மற்றும் பால் உபபொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
குறிப்பாக, பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டி பாதுகாத்தல், விற்பனை ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து சாதனையும் படைத்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பல தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டாலும் மற்றவைகளை ஒப்பிடுகையில் தரத்திலும், விலை குறைவிலும் ஆவின் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், பிற மாநில பால் பிராண்ட்கள் தமிழகத்தில் கால் தடம் பதிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. உதாரணமாக, குஜராத் மாநில பொதுத்துறை நிறுவனமான அமுல் தமிழகத்தில் தனது கிளைகளை படிப்படியாக அதிகப்படுத்தி வந்தாலும் ஆவின் வளர்ச்சியை தடுக்கமுடியால் திணறி வருகிறது. இந்தநிலையில், தனது சந்தை வளத்தை பெருக்கும் வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி ஆவின் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை மாதவரம் மற்றும் அச்சரப்பாக்கம் ஆகிய இடங்களில் புதிதாக உற்பத்தி மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-20ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக 2024-25ல் சுமார் 7 லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகிறோம். மக்களின் பேராதரவுடன் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி செல்வதற்கான அத்தியாயமாக விற்பனையை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய உற்பத்தி மையங்களை தொடங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, மாதவரத்தில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் பாலும், அச்சரப்பாக்கத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பாலும் கையாளும் அளவிற்கு உற்பத்தி மையங்களை கட்டமைக்க உள்ளோம். அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த உற்பத்தி தளங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.