சென்னை: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் புகார் குழுக்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் தொடர்பு எண்களை இணையதளத்தில் வெளியிடுவதற்காக புதிய அதிகாரபூர்வ இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தொடர்பாக 3 மருத்துவர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாலியல் தொல்லை தொடர்பாக உயர் அதிகாரிகள் மீது புகார் கொடுத்ததால் பணியிட மாற்றம் மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வாதிட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களை இடைநீக்கம் செய்ததில் முகாந்திரம் இல்லை என்று கூறி இடைநீக்க உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக பெண் டாக்டர் ஒருவரை நீதிபதி நியமித்து, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் இது தொடர்பான புகார் குழுக்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ெஜனரல் வீரகதிரவன் ஆஜராகி, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பணிபுரியும் பெண்கள் குடும்பத்தையும், தங்களது பணிகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்காகவே பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் வழங்கும் புகார் மீது இயற்கை நியதிக்கு உட்பட்டு நியாயமான முறையில் புகார் குழுக்கள் விசாரணை நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணை சமரசம் செய்து அவருக்கு நேர்ந்த கொடுமையை மூடிவிடக் கூடாது. நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு அந்த விசாரணை அறிக்கை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு 10 நாட்களுக்குள் அனுப்பப்பட வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு உரிய நிவாரணம் வழங்க 60 நாட்களுக்குள் புகார் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை புகார் வந்து அந்த புகார் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் விதிகளை வகுத்துள்ளது.
பெரும்பாலான புகார்கள் பல்வேறு காரணங்களால் நிரூபிக்கப்படாத நிலை உள்ளது. தனது வேலைக்கு சிக்கல் வந்துவிடுமோ, வேறு இடத்திற்கு மாற்றம் செய்துவிடுவார்களோ என்று என்ற பயத்தில் புகார் கொடுத்தவர்கள் புகார்களை திரும்ப பெறுகிறார்கள். அவர்கள் கொடுத்த புகார்களுக்கு சாட்சியாக சக ஊழியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. கடந்த 7 ஆண்டுகளில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. பணி வழங்கும் நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணிபுரியும் இடங்களில் பாலின பாகுபாடு இல்லாத வகையிலான சூழலை நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனங்களிலும் அமைக்கப்பட்டுள்ள புகார் விசாரணை குழுக்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான விழிப்புணர்வை அப்போதைக்கப்போது ஏற்படுத்த வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டம் விதி 13ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கும்போது முதல் எதிர்ப்பு அவரது குடும்பத்திலிருந்துதான் வரும். அந்த சிக்கல்களை உடைத்தெறிய வேண்டும். விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த சட்டத்தை சிறப்பான முறையில் அமல்படுத்துவதுடன் அப்போதைக்கப்போது இதில் திருத்தங்களையும் கொண்டுவந்துள்ளது.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதிலும், பெண்கள் நலனை காப்பதற்காகவும் சமூக நலன் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணத்தை தர சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் குழுக்களின் தொடர்பு எண்கள் மற்றும் புகார் குழுக்கள் தொடர்பான தகவல்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய இணைய தளத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பாலின பாகுபாடு தடுப்பு பணி செயல்பாடு குறித்தும், பணியிடங்களில் நல்ல பணிச்சூழல் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலின பட்ஜெட் பிரிவு உள்ளதை அனைத்து பெண் ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மாநில மகளிர் ஆணையம் முக்கிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று அங்குள்ள அடிப்படை உண்மைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தகுதியுள்ள திறமையான நபர்கள் அடங்கிய மாநில அளவிலான தொழில்நுட்ப குழுவை அமைத்து பாலின பாகுபாடுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்.
மாவட்ட, தாலுகா, கிராம அளவில் நடத்தப்படும் பள்ளிகள், மருத்துவமனைகள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்கள் பாலின பாகுபாடு சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். இதுபோன்ற நிறுவனங்களில் அடிக்கடி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கு 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அப்போது, இந்த உத்தரவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
* பாதிக்கப்பட்ட பெண் வழங்கும் புகார்
மீது இயற்கை நியதிக்கு உட்பட்டு நியாயமான முறையில் புகார் குழுக்கள் விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை சமரசம் செய்து அவருக்கு நேர்ந்த கொடுமையை மூடிவிடக் கூடாது. பணி வழங்கும் நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.