Saturday, February 24, 2024
Home » புதிய வகை கொரோனா வேகமாக பரவுவதால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?.. 4வது அலை அச்சத்தால் அதிகாரிகள் ஆலோசனை

புதிய வகை கொரோனா வேகமாக பரவுவதால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?.. 4வது அலை அச்சத்தால் அதிகாரிகள் ஆலோசனை

by Neethimaan


புதுடெல்லி: புதிய வகை கொரோனா வேகமாக பரவுவதால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு வருமா? என்று கேள்வி எழுந்துள்ளது. கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் பரவத் தொடங்கிய கொரோனா முதல் அலை, 2021 ஏப்ரலில் 2வது அலையாக உச்சத்தை தொட்டது. 2022 ஜனவரியில் 3வது அலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தியா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜேஎன்1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்றின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்ததாக கூறப்படும் ‘ஜேஎன்1’ வகை கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புதியவகை வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 628 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்தது. மேலும் கோவா 34, மகாராஷ்டிரா 9, கர்நாடகா 8, கேரளா 6, தமிழகம் 4, தெலங்கானா 2 என நாடு முழுவதும் மொத்தம் 63 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிய, மாநில சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

இதற்கிடையே வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு என்பதால், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்றும், அதன்மூலம் கொரோனாவின் 4வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் ஜேஎன்1 வகை கொரோனா பரவல் தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து புதிய வழிகாட்டுதல்கள் எதுவும் வெளியாக வில்லை. எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஓரிரு நாளில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

You may also like

Leave a Comment

6 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi