திருவிடைமருதூர்: தஞ்சை- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் தஞ்சை முதல் சோழபுரம் வரை, சோழபுரம் முதல் சேத்தியா தோப்பு வரை, சேத்தியாதோப்பு முதல் விக்கிரவாண்டி வரை என மூன்று கட்டங்களாக நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக தஞ்சை- சோழபுரம் வரை 48.3 கி.மீ வழித்தடத்துக்கான பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதற்காக வேம்பக்குடியில் சுங்கச்சாவடி அமைத்து நெடுஞ்சாலைத்துறை கட்டணம் வசூலித்து வருகிறது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான 50 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது.
இந்த பிரிவில் 3 புறவழிச்சாலை, 4 பாலங்கள் உள்ளன. அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததால் இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதற்காக மானம்பாடியில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கடந்த மாதம் 12ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திறப்பு தேதி திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மானம்பாடி சுங்கச்சாவடி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. எந்தவித முன்னறிவிப்பின்றி இன்று சுங்கச்சாவடி திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.