சென்னை: புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன், கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 50 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம். அதேபோன்று மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைகள் திறக்க விதிகள் இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் கல்வி நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான வழிமுறைகளில் உள்ள சில விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் நிறுவப்பட்ட பகுதியிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள தூரத்திற்குள் எந்தவொரு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் இருந்தாலும் கடைகள் திறப்பதற்கான விதிகள் பொருந்தாது. அதேபோல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அதில் வழங்கப்பட்ட தகுதிகள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.