கூடுவாஞ்சேரி: காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் புதிதாக சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா பூ கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, காட்டூர், விநாயகபுரம், மயிலிமா நகர், கோகுலம் காலனி, கோகுலம் காலனி விரிவு பகுதி, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், காரணைப்புதுச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதனையடுத்து, புதிதாக சேர்ந்த 29 மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரோஜா பூ கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியை கலைச்செல்வி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக ஊராட்சி மன்ற தலைவர் நளினிஜெகன் கலந்துகொண்டு 227 மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் கரும்பலகை ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர், புதிதாக சேர்ந்த 29 மாணவ, மாணவிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இதில் ஆசிரியைகள் யமுனா, சரஸ்வதி, தமிழ்ச்செல்வி, தீபா, ராணி, அருணாதேவி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.