செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூரில், புதியதாக அமைக்கப்பட்ட சிக்னலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, மற்றும் ஊரப்பாக்கம் வரை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து அதிகளவில் விபத்துகள் அரங்கேறி வந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி பொத்தேரி, காட்டுப்பாக்கம் சந்திப்பில் டிப்பர் லாரியில் சிக்கி, ஒரு பெண் இரண்டு கல்லூரி மாணவர்கள் உள்பட நான்கு பேர் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இதுபோன்ற சாலை விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்கும் விதமாகவும், காட்டாங்கொளத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 7வது வார்டு உறுப்பினர் காயத்ரி சரவணன் மற்றும் 6வது வார்டு உறுப்பினர் தேவிகோகுலகிருஷ்ணன் ஆகியோரது சொந்த பணத்தில் ரூ.6 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் காட்டாங்கொளத்தூர் சாலை சந்திப்பில் புதிய சிக்னல் அமைக்கும் பணி முடிவடைந்தது. இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிக்னலை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம், துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.