சாயல்குடி: கடலாடி அரசு மருத்துவமனை குடியிருப்பு வீடுகள் சேதமடைந்து கிடப்பதால் இடித்து அகற்றி விட்டு புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பதற்காக கடலாடி பஸ் நிலையம் அருகே குடியிருப்பு தொகுப்பு வீடுகள் கடந்த 1970ல் ஆறு வீடுகள் கட்டப்பட்டது. அப்போது ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்ததால், ஒரே வளாகத்திற்குள் மருத்துவமனை கட்டிடம் மற்றும் வீடுகள் கட்டப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டு அரசு தாலுகா தலைமையிட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கடலாடி போலீஸ் ஸ்டேஷன் அருகே புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பஸ் நிலையம் அருகே இருந்த குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு 54 வருடங்கள் ஆகிவிட்டதால், வீடுகள் சேதமடைந்து விட்டது.
இதனால் இங்கு இருந்த பணியாளர்கள் வீட்டினை காலி செய்து விட்டனர். இதனால் கடந்த 9 வருடங்களாக காலியாக இருக்கிறது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாலும், சுற்றுச்சுவர் இடிந்து, புதர்மண்டி கிடப்பதாலும் பாம்பு போன்ற விஷஜந்துகள் குடியிருப்பாக மாறி விட்டது. மேலும் கடலாடி அரசு மருத்துவமனையில் தற்போது வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தங்கவதற்கு போதிய மருத்துவ குடியிருப்பு வீடுகள் இல்லாததால், 11 கிலோ மீட்டர் உள்ள சாயல்குடி, 14 கி.மீ இருக்கும் முதுகுளத்தூர், 40 கி.மீ. உள்ள பரமக்குடியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி, தினந்தோறும் கடலாடி வந்து செல்கின்றனர்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்,செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தங்க வீடு வசதியில்லாததால், பணியிட மாறுதலாகி சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமணையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் போதிய சிகிச்சை பெறமுடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் உள்பகுதியை சேர்ந்த செவிலியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருவதால், கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே கடலாடி பஸ் நிலையம் அருகே உள்ள பழைய குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய புதிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர அரசு முன்வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.