இந்த சமூகத்தை நீங்கள் மனப்பூர்வமாக விரும்பினால், அதே சமுதாயம் உங்களையும் பன்மடங்கு நேசிக்கும். உங்களால் சமுதாயம் பயன் அடைந்தால்,உங்களை அந்த சமுதாயம் சாதனையாளராக உருவாக்கும். சமுதாயத்தை நேசித்தால்,கண்டிப்பாக நாளை உலகம் நிச்சயம் உங்களை நேசிக்கும், வாழ்த்தும். இதற்கு உதாரணமாக இவர்களைச் சொல்லலாம்.கல்கத்தாவில் ஒரு மழைக்கால வெள்ளத்தில் வீடு இல்லாத ஒருவன் ஈரத்தில் நனைந்து துயரப்படுவதைஅந்த பெண்மணி கண்டார். ட்ராமில் பயணித்த அந்தப் பெண்மணி அவசரமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கி,அவனுக்கான மருந்து வாங்கிக் கொண்டு உடன் வரும் நண்பருடன் ஓட்டமும், நடையுமாக வந்தார். தண்ணீரில் மூழ்கி இருந்த அம்மனிதன் தலையை அந்தப் பெண்மணி உயர்த்திய போது அவன் இறந்து விட்டதை உணர்ந்தார். அந்தப் பெண்மணி வருத்தத்துடன் இவன் சாகும் முன் ஏதோ சொல்ல விரும்பி இருக்கக்கூடும். அந்தக் கடைசி வார்த்தை கேட்க எவரும் இல்லாமல் போய்விட்டதே என்று மனம் பதைத்தார். விசித்திரமான ஒரு வார்த்தை அந்தப் பெண்மணி பிரயோகித்தார். மனிதன் தனக்குரிய மாண்போடு சாவதற்குத் தகுதியான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க முடியுமானால் என்றபடி பெருமூச்சு விட்டார். அந்த பெண்மணி அந்த இடத்தையும் கண்டடைந்தார்.அவர்தான் புனிதர் அன்னை தெரசா. மரியாதையாக வாழ்வதற்கு மட்டுமல்ல, மரியாதை யுடன் சாவதற்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எத்தனை மேலானது.
‘‘வல்லமை தாராயோ? என்று பராசக்தியைக் கேட்ட மகாகவி நான் பயனுற வாழ்வதற்கே என்றா கேட்டார்? இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்றல்லவா கேட்கிறார். தனக்காக வாழும் போது உண்டாகும் சக்தியை விட பிறருக்காக வாழும் எண்ணம் வரும்போது நம்மில் ஒரு புது வேகம் பிறக்கிறது.சுவாமி விவேகானந்தரிடம் வேதாந்தம் படிக்க சில இளைஞர்கள் குழுமி இருந்தார்கள். அப்போது பீகாரில் இயற்கைப் பேரிடர் என்ற செய்தி வருகிறது. மனம் கலங்கிய விவேகானந்தர் தம் இளைய மாணவர்களைப் பார்த்து ‘புறப்படுங்கள் எல்லோரும் புறப்படுங்கள். துன்பப் படும் நம் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவோம்’ என்று கட்டளையிடுகிறார். ஒரு இளைஞர் மட்டும் ‘‘அது எங்கள் வேலையல்ல… நாங்கள் உங்களிடத்தில் வேதாந்தம் படிக்க மட்டும்தான் வந்திருக்கிறோம். அதை கற்றுவிட்டு வீடு போக வேண்டும். எனவே நீங்கள் வேதாந்தம் பாடம் சொல்லுங்கள் எனக் கறாராகப் பேசினார். சுவாமியோ வேதாந்தம் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், ஏன் அடுத்த ஜென்மத்தில் கூட படித்துக் கொள்ளலாம்.போ… சக மனிதனுக்கு உதவுகிற வேலையை முதலில் பார் என்று கட்டாயமாகச் சொல்லிவிடுகிறார்.
ஒரு அரசர் கனவு காண்கின்றார். இறந்த பின் அவர் சொர்க்கம் போகிறார். அங்கு ஒரு பெரிய மாளிகையை கண்டு திகைத்து இது யாருடையது?என்று கேட்கின்றார்.தூதுவர்கள் அரசரின் வேலைக்காரர் பெயரைச் சொல்லி அவருடையது என்றதும் ‘‘என் வேலைக்காரருக்கு இத்தனை பெரிய மாளிகை என்றால் எனக்கு இதைவிட பெரிதாக இருக்குமே காட்டுங்கள்” என்கிறார். ஒரு சின்ன குடிசையைக் காட்டி ‘இதுதான் உங்கள் வீடு’ என்கிறார்கள், கொதித்துப் போய் வேலைக்காரனை விட எனக்கு ஏன் சிறியது? என்று கோபப்படுகிறார். தூதுவர்களோ ‘‘உங்களுக்கு கடவுளின் ஏற்பாடு பற்றித் தெரியாதா? பூமியில் நீங்கள் பிறருடன் எதை எதைப் பகிர்ந்து கொள்கிறீர்களோ அதை அதைக்கொண்டு சொர்க்கத்தில் உங்களுக்கு வீடு கட்டப்படும் என்பதை மறந்துவிட்டீர்களா? என்றனர். உங்கள் அலைபேசியில் உள்ள வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் உள்ள தகவல்களை மட்டும் ஷேர் செய்தால் போதாது, உணவையும், பொருளையும்,நேரத்தையும், உடல் உழைப்பையும் பிறரோடு ஷேர் செய்ய வேண்டும் என்பதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.பிறருக்கு உதவ பணம் முக்கியமல்ல. ரத்ததானம், விழியற்றவருக்கு விழியாய் விளங்கிப் படித்துதவும் நேரதானம், உறுப்பு தானம், உழைப்பு தானம், நாம் கற்றதை எழுத்தாலோ, பேச்சாலோ மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் அறிவுத் தானம், இவை எல்லாமே உதவி தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது அத்தனையும் கூட தாய்மை உணர்வுதான். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.
மனிதக் கழிவுகளை அகற்றும் துப் புரவுப் பணியில் தனது ஏழு வயதிலேயே ஈடுபட்ட ஒரு பெண்- தனது பத்தாவது வயதிலேயே திருமணம் ஆகி கணவன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கேயும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை தொடர்ந்தார். அவருக்கு இந்திய முக்கிய துறைகள், சேவைகளில் பணியாற்றும் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதினைப் பெறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது இமாலய சாதனை தானே! அது மட்டுமா? அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்று பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக சரளமாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவராகவும் அவர் திகழ்கிறார்.அவர்தான் உஷா சௌமார் என்ற 43 வயதுப் பெண்மணி. தற்போது சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் அவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் டீக் என்னும் கிராமம். கலப் இன்டர்நேஷனல் சோசியல் சர்வீஸ் ஆர்கனைசேஷன் என்னும் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவருக்குத் தான் பத்ம விருது வழங்கப்பட்டிருக்கிறது.சமூக சேவைக்கு குறிப்பாக மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகத் தான் இந்த விருது.
தன்னுடைய தாயாருடன் சேர்ந்து தனது ஏழாவது வயதிலேயே மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டார் உஷா. எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலேயே இந்த பணியை தாயும்,மகளும் செய்து வந்திருக்கின்றனர். ஆல்வர் என்னும் கிராமம் தான் உஷாவின் கணவரின் ஊர். அவரது கணவர் முனிசிபாலிட்டியில் துப்புரவுத் தொழிலாளி. மாமியாரும் மனிதக் கழிவுகளை அள்ளுபவரே,! எனவே உஷாவும் கழிவுகளை அகற்றும் வேலையை செய்தாக வேண்டி வந்தது.உஷாவின் முன்னோர்களும் மீள வேறு வழியில்லாமல் இதே தொழிலைத் தான் செய்து வந்திருக்கின்றனர். மீண்டு விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்ட சில சமயங்களிலும் சமூகம் அதற்கு வழி விடாமல் தடுத்தே வந்திருக்கிறது. அவரது ஆரம்ப காலக் குழந்தைப் பருவ நினைவுகளே வலியை அளிக்கக் கூடியன. அதிகாலைப் பொழுதிலேயே மனிதக் கழிவுகளை அள்ளும் கூடையையும், துடைப்பத்தையும் எடுத்துக்கொண்டு கிராமத்துக் கழிப்பறைகளைத் தூய்மை செய்ய விரையும் ஒர் உருவம் தான் தனது தாய் என்ற நினைவு ஆழமாக அந்தப் பிஞ்சு மனதில் பதிந்து இருந்தது.
கிராமத்துத் தெருக்களில் நடக்கும் போது அழிக்க முடியாத ஒரு அவமானம் தன்மீது படிந்து இருப்பதாக அவர் உணரத் தொடங்கினார். சற்றே வயதான பிறகு அந்த சிறுமி, தனியாக மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். நரக வேதனையை அனுபவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே கிடையாது என்கிறார் அந்தக் கால நினைவுகளைச் சொல்லும்போது.பிற குழந்தைகள் புத்தகப் பையோடு பள்ளிகளை நோக்கி போய்க்கொண்டிருந்த சமயத்தில், கையில் கூடை மற்றும் விளக்குமாறுடன் கழிவறைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் சிறுமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும். திருமணமான பிறகு என் இருப்பிடம் தான் மாறியதே தவிர வேலை மாறவில்லை. நாங்கள் தூய்மை செய்யும் கழிப்பறைகள் உள்ள வீட்டு உரிமையாளர்கள் சில சமயம் மிஞ்சிப்போன உணவுகளை எங்களுக்கு கொடுப்பார்கள், புதிய ஆடைகளை நாங்கள் அணிந்ததே கிடையாது என்கிறார் உஷா.
டாக்டர் பதக் என்ற சமூக சேவகர் இவர்களை மாற்று வேலைகளில் ஈடுபடும்படி ஆலோசனை சொன்னார். அதன் பிறகு ‘நய் டீஷா’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. மனிதக்கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கு பல தொழில்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.
புதிய வாழ்வின் கதவுகள் அவர்களுக்குத் திறக்கப்பட்டன. காலையில் எழுந்ததும் மற்றவர்களின் கழிப்பறைகளை தூய்மை செய்வதற்குத் பதிலாக குளித்து, துவைத்த ஆடைகளை உடுத்தி பைகள் தைக்கவும், ஜாம்கள், ஊறுகாய்கள் மற்றும் அப்பளங்கள் தயாரிக்கவும் குதூகலத்துடன் பயிற்சி மேற்கொண்டனர். தினசரி தேநீர் மற்றும் நொறுக்குத் தீனிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.நான் மிகவும் சுத்தமாகவும், சௌகரியமாகவும், முன்பிருந்ததற்கு மாறாக முற்றிலும் வித்தியாசமாக உணர்ந்தேன். நாள் முழுக்க சந்தோஷம் எங்களுடன் இருந்தது என்று நினைவு கூர்கிறார் உஷா.தாய் அந்தப் பணியில் இருந்து வெளியேறிவிட்டாலும் வேறு யாராவது அதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே சுலப் மூலம் கிராமங்களில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடின உழைப்பால் அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆனார் உஷா. நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.அவர் துணிச்சல், சேவை மற்றும் தலைமைப் பண்புகளுக்காக அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அங்கீகாரம் தான் பத்ம விருது!தன்னுடைய துயரத்தின் ரணங்களை அர்த்தமுள்ள வாழ்க்கையின் மூலம் பிறர்க்கு செய்யும் நன்மைகளால் ஆற்றுகிறார் உஷா. பல குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்வை மலரச் செய்திருக்கக் கூடிய உஷா என்ற இந்த தாயின் அர்ப்பணிப்பும்,சமூக அக்கறையும்,சமூக மாற்றமும் நன்றிக்குரியவை என்பதில் ஐயமில்லை.