சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையத்தில் இருந்து முழு அளவிலான விமான சேவை நேற்று முதல் தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தில் முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. பின்னர் மே 3ம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கி அந்த மாத இறுதியில் நிறைவடைந்தது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தில், முழு அளவிலான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 13ம் தேதியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், இந்த புதிய முனையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் இயக்கப்பட்டன. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மேலும் சில விமானங்களும் இயக்கப்பட்டன. கடந்த 26ம் தேதி முதல் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முனையத்தில் இருந்து இயங்க தொடங்கியது. இதனால் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஓமன், கத்தார், துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்படும் புறப்பாடு, வருகை விமானங்கள் இயங்க தொடங்கின.
தொடர்ந்து பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோபியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ், கல்ப் ஏர்வேஸ், தாய் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வருகை, புறப்பாடு விமானங்கள் படிப்படியாக இயங்க தொடங்கின. மொத்தம் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 51 புறப்பாடு விமானங்களும், 51 வருகை விமானங்களும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 00.01 மணியில் இருந்து, அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வருகை புறப்பாடு விமானங்கள் முழுமையாக இயங்க தொடங்கிவிட்டன. இந்த புதிய முனையத்தில் 51 வெளிநாட்டு விமானங்கள் புறப்பட்டு சென்றன. அதேபோல் 51 வெளிநாட்டு விமானங்கள் வந்தன. நேற்று மட்டும் 102 விமான சேவைகள் இயக்கப்பட்டன. இதையடுத்து ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பழைய சர்வதேச முனையமான டெர்மினல் 3 எனப்படும் டி-3 வரும் 10ம் தேதிக்கு பின்பு முழுமையாக மூடப்படுகிறது. அங்கிருந்து சேவை எதுவும் கிடையாது. அந்த டி3 முனையத்தை இடிக்கும் பணி சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. அதற்கு பிறகு ஃபேஸ் 2, கட்டும் பணிகள் தொடங்க இருக்கிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.