திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலை மற்றும் பெருமாநல்லூர் சாலை பகுதிகளில் இருந்து திருப்பூர் மாநகரின் டவுன்ஹால், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரக்கூடிய முக்கிய வழித்தடமாக உள்ளது புஷ்பா ரவுண்டானா பகுதி. இப்பகுதியின் பிஎன் ரோடு ரயில்வே மேம்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் போக்குவரத்து போலீசார் முயற்சியில் பேருந்துகள் நின்று செல்ல இடம் ஒதுக்கி தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் நிலையில் பேருந்துகள் தடுப்புகளுக்குள்ளாக வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்லும்போது சாலையின் மறுபுறத்தில் வாகனங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் செல்வதற்கு வசதியாக இருக்கும் எனவும், இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.