புதிய சிட்டி ஸ்போர்ட் கார் வழக்கமான ஹோண்டா சிட்டி காரில் இருந்து வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. சுந்தரம் ஹோண்டா இன்று புத்தம் புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் காரை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி உள்ளது. சிவசங்கரன் – Chief guest, Professor Loyola College, பிரணித் சஞ்செட்டி – Area Manager, Honda Cars India Ltd, அரவிந்த் -Dealer Quality Regional Manager, Honda Cars India Ltd, காளியப்பன் – Sales Manager, Sundaram Honda மற்றும் ஏற்கனவே உள்ள ஹோண்டா பிரியர்கள் ஆகியோர் புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தினர்.
ஹோண்டா கார்ஸ் (Honda Cars), ஜப்பான் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஜப்பான் கார் நிறுவனங்கள் என்றாலே இந்தியாவில் ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க கூடியவை. ஹோண்டா நிறுவனமும் ஆரம்பத்தில் இந்தியாவில் வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போதைக்கு இந்தியாவில் வெறும் மூன்றே மூன்று ஹோண்டா கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஹோண்டா சிட்டி (City) செடான் காருக்கு இந்தியா உள்பட உலகம் முழுக்கவே வரவேற்பு உள்ளதால், சிட்டி கார் மட்டும் இந்தியாவில் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விற்பனையில் உள்ளது.
இதுதவிர, அமேஸ் (Amaze), எலெவேட் (Elevate) என்கிற இரு ஹோண்டா கார்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஹோண்டா சிட்டி காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக, புதியதாக ‘சிட்டி ஸ்போர்ட்’ (City Sport) என்கிற பெயரில் சிட்டி காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சிட்டி ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி கார் ஆனது பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், அதே பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில்தான் புதிய சிட்டி ஸ்போர்ட் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கமான சிட்டி காரானது மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், இதில் சிவிடி (CVT) கியர்பாக்ஸ் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய சிட்டி ஸ்போர்ட் கார் வழக்கமான ஹோண்டா சிட்டி காரில் இருந்து வெளிப்புறம் மற்றும் உட்புறம் என இரு பக்கங்களிலும் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, காரை சுற்றிலும் ‘ஸ்போர்ட்’ (Sport) பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய சிட்டி ஸ்போர்ட் கார் ஆனது 5ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரை அடிப்படையாக கொண்டது ஆகும். அதாவது, 5ஆம் தலைமுறை சிட்டி காரில் வழங்கப்படும் அத்தனை அம்சங்களும் புதிய சிட்டி ஸ்போர்ட் காரிலும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, புதிய சிட்டி ஸ்போர்ட் காரில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 119 பிஎச்பி மற்றும் 145 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெடில் ஷிஃப்டர்கள் உடன் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜை பெறலாம் என ஹோண்டா தெரிவிக்கிறது.
சிட்டி ஸ்போர்ட் காரின் வெளிப்பக்கத்தில், முன்பக்க கிரில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு இருக்க, அதற்கு ஏற்ப டிரங்க் லிப் ஸ்பாய்லர், மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் பின்பக்கத்தை வெளிப்பக்க கண்ணாடிகளும் பளபளப்பான கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. காரின் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள் கிரே நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் உள்ளது. அதேநேரம், இருக்கைகள், டோர் இன்செர்ட்கள் மற்றும் ஸ்டியரிங் சக்கரம் உள்ளிட்டவை சிவப்பு நிறத்தில் தையலிடப்பட்டு உள்ளன. ஏழு நிறங்களில் ஒளிரக்கூடிய விளக்குகளை கேபினை சுற்றிலும் கொண்டுள்ள சிட்டி ஸ்போர்ட் கார், ஏற்கனவே கூறியதுபோல் வழக்கமான 5-ஆம் தலைமுறை சிட்டி காரின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.