பெரம்பூர்: காலையில் திருமணம் நடந்து உற்றார், உறவினர்கள் வாழ்த்திவிட்டு சென்ற நிலையில், மதியம் காதலனுடன் மணப்பெண் ஓடிவிட்டார். இதனால் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னை பெரம்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த தம்பதி அகிலன். நாகவல்லி. இவர்களது மகள் அர்ச்சனா (20). இவருக்கும் மாதவரம் பர்மா காலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் பெசன்ட் நகர் சர்ச்சில் நேற்று காலை 6 மணிக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. இதன்பிறகு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்கள் கொடுத்துவிட்டு சாப்பிட்டு சென்றனர்.
இதையடுத்து நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சிறப்பாக செய்துகொண்டிருந்தனர். அப்போது மணப்பெண் அர்ச்சனா, ‘’ அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று வருகிறேன்’ என்று கிளம்பியுள்ளார். இதன்பிறகு பல மணி நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகம் ஏற்பட்டு அவரை அனைவரும் தேட ஆரம்பித்தனர். மேலும் அர்ச்சனாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில், ‘’அர்ச்சனா ஏற்கனவே எருக்கஞ்சேரியை சேர்ந்த கலை என்கின்ற கலையரசன் என்பவரை காதலித்துள்ளார்.
இதனால் தற்போது நடந்த கட்டாய திருமணத்தில் அர்ச்சனாவுக்கு விருப்பம் இல்லாததால் தனது காதலனுடன் ஓடிவிட்டார்’ என்று தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. இதுசம்பந்தமாக அர்ச்சனாவின் தாய் நாகவல்லி கொடுத்த புகாரின்படி, திருவிக.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து அர்ச்சனா, அவரது காதலன் கலையரசனை தொடர்பு கொண்டபோது இரண்டுபேரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்று மாலை மாதவரம் அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்காக நிறைய பணம் செலவு செய்திருந்ததாக விஜயகுமார் தரப்பினர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.