திருச்சி: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது அன்பில் மகேஷ் தேய்வித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷின் தந்தை அன்பில் பொய்யாமொழி அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாளையொட்டி விடிவெள்ளி சிறப்புப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, திருச்சி கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் சார்பில் சீருடைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது.
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என ஒன்றிய கல்வித்துறை தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தருகிறது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விட குறைவான நிதியையே ஒன்றிய அரசு கொடுக்கிறது. மலைவாழ் பிள்ளைகளை அழைத்து வருவதற்கான நிதி உட்பட அனைத்து நிதியும் இதில் அடங்கும். ள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரவேண்டிய ரூ.573 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த ஆண்டு இறுதித் தவணையாக வரவேண்டிய ரூ.249 கோடியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை.
ஒன்றிய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு கல்வி நிதி ஒதுக்காததால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிஎம்ஸ்ரீ கேர் நிதி என்பது தேசிய கல்வி கொள்கையை ஒட்டி வரக்கூடியது என கூறுகிறார்கள். தமிழகத்தின் கல்வி சேவையை பாராட்டி, அவர்களாகவே நிதியை ஒதுக்கியிருக்க வேண்டும். ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளிக்க முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய கல்வி கொள்கை என்பது விவாதத்திற்கு உட்பட்டது, அதை கூறி ஏன் நிதியை நிறுத்துகிறீர்கள்?. தேசிய கல்வி கொள்கைக்காக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதா. இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் உடனடியாக நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என்று கூறினார்.